தொழிலதிபர்களிடம் ரூ.30 கோடி மோசடி கள்ளநோட்டு 'செல்வம்' பற்றி திடுக் தகவல்

ராமநத்தம் : ராமநத்தம் அருகே கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான வி.சி., பிரமுகர் செல்வம், பல தொழிலதிபர்களை வலையில் விழ வைத்து, ரூ. 30 கோடி அளவில் மோசடி செய்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,39; முன்னாள் வி.சி., நிர்வாகி. இவர், மீதான வழக்கு தொடர்பாக, விசாரிக்க, கடந்த மார்ச் 30ம் தேதி, ராமநத்தம் போலீசார் அவரது நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அங்கு, 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. அதையடுத்து, அதர்நத்தம் கிராமம் அரவிந்த்,30; கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் சக்திவேல், 26; உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், தலைமறைவான முக்கிய குற்றவாளி செல்வம் மற்றும் அவரது கும்பலை, 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் கடந்த 1ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வம், அதர்நத்தம் வல்லரசு, 25; ஆவட்டி பிரபு, 32; பெரம்பலுார் மாவட்டம், பீல்வாடியைச் சேர்ந்த பெரியசாமி,29; ஆறுமுகம், 30; பெரம்பலுார் மாவட்டம், ஆடுதுறை சூர்யா, 25; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான செல்வத்திடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், கடந்த 2021ம் ஆண்டில் இருந்து அதர்நத்தம் கிராமத்தில் அவர் தனது பண்ணை வீட்டில், ரகசிய அறை அமைத்து, அதில் ஜெராக்ஸ் மிஷின் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்துள்ளார்.
சென்னை, பள்ளிக்கரணையில் தனது கட்டுமான நிறுவனத்திற்கு வாகனத்தில் கள்ள நோட்டுகளை எடுத்து செல்லும் போது, போலீசில் சிக்காமல் இருக்க தனது கும்பலுடன் போலீஸ் சீருடை, வாக்கி டாக்கி, ரைபிள் துப்பாக்கி பயன்படுத்தியதும், கள்ள நோட்டுகள் அடுக்கி வைத்த பெட்டிகளை வீடியோ எடுத்து, பல தொழிலதிபர்களுக்கு அனுப்பி, அவர்களிடம் ஆர்.பி.ஐ., தங்களிடம் பணம் அனுப்பியதாகவும், 1 லட்சம் ரூபாய் அனுப்பினால், 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், தொழிலதிபர்களுக்கு கோயம்புத்துாரை சேர்ந்த கமலி இடைத்தரகராக இருந்து, 9 கோடி ரூபாயை செல்வத்திற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். பணம் கிடைக்காதவர்கள் தகராறில் ஈடுபடும்போது, அவர்களை வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று, குஷிப்படுத்தியுள்ளார். மேலும், இரிடியம் இருப்பதாகவும் கூறி பலரிடம் பணத்தை வாங்கி மோசடியும் இந்த கும்பல் செய்துள்ளது.
மோசடி பணத்தில் ஊட்டி, கேரளா மாநிலத்தில் ரிசார்ட்டுகள், குவைத் நாட்டில் கன்சல்டன்சி கம்பெனியை குத்தகைக்கு நடத்திவந்துள்ளார். பல கோடி ரூபாய் வங்கி கணக்கில் உள்ளதாகவும், அதனை மீட்க குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டுமென பலரிடம் பணம் மோசடி செய்தார்.
முக்கியமாக, செல்வத்தின் கீழ் 17க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு பல மாநிலங்களில் தொழிலதிபர்கள், சாதாரண மக்களிடம் சுமார் 30 கோடி ரூபாய் அளவில் பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வம் உள்ளிட்ட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து, ஒரு கார், 3 லேப்டாப், 9 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் திட்டக்குடி உட்கோட்டத்திற்கு வந்த பின், வேப்பூர், ராமநத்தம், திட்டக்குடி பகுதியில் நடந்த 3 கொலை வழக்குகளின் குற்றவாளிகளை கைது செய்து பாராட்டு பெற்றார். தற்போது, கள்ள நோட்டு வழக்கில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் சுற்றி, கடந்த 1ம் தேதி முக்கிய குற்றவாளியான செல்வம் உட்பட 6 பேரை கைது செய்தார். அதை தொடர்ந்து, அவர் சக போலீசார் மற்றும் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளார்.





மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து