'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து

4



புதுடில்லி: இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை மே 10ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


கடந்த ஏப்.,22ம் தேதி பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பதிலடி தாக்குதலை நடத்தியது.


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 பயங்கரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜம்மு, பதன்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்ஷாலா போன்ற விமான நிலையங்களிலும் விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement