அணு ஆயுத நாடு; இந்த பூச்சாண்டி பலிக்காது!: பஹல்காம் பயங்கரத்துக்கு பதில் சொல்லுமா பாக்.,

11

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பகைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்கள் பதிலடி தருவோம் என கூறும் பாகிஸ்தான், 'நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு' என, மிரட்டி வருகிறது.

இரு நாடுகளின் ராணுவ வலிமை மற்றும் அணுசக்தி திறன், சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும், ஒரு நாடு போருக்கு கிளம்பிவிட்டால், அது அணு ஆயுதத்தை தான் முதல் ஆயுதமாக பயன்படுத்துமா?

அப்படியென்றால், ரஷ்யாவில் இல்லாத அணு ஆயுதமா? அமெரிக்காவை விட, அதிக ஆயுதங்களை குவித்துள்ள ரஷ்யா, உக்ரைன் போரில் தனது முழுத்திறனையும் பயன்படுத்தவில்லையே. அணுசக்தி இருப்பதாக காட்டிக்கொள்ளவில்லையே.

இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்தாலும், இந்தியா பெரிய ராணுவ நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது; பாகிஸ்தான் பயந்து நடுங்குகிறது.

பின்தங்கும் பாக்.,



படை வீரர்கள் பலத்தில், இந்தியா 15 லட்சம் ராணுவ வீரர்கள் எனும் வலிமை கொண்டது; பாகிஸ்தானில், 6 லட்சத்து 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் தான் உள்ளனர்.

2024ம் ராணுவ பட்ஜெட்டில் இந்தியாவின் ஒதுக்கீடு 8,600 கோடி டாலர்கள்; பாகிஸ்தானின் ஒதுக்கீடு 1,000 கோடி டாலர்கள். அணு ஆயுதங்களை பொறுத்தவரை, இந்தியாவிடம் 180, பாகிஸ்தானிடம் 170 உள்ளன.

இந்தியாவிடம் 480 அதிநவீன போர் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம், 300 தான் உள்ளது. கடற்படை கப்பல்களைப் பொறுத்தவரை, இந்தியாவிடம், 210 மற்றும் பாகிஸ்தானிடம் 44 உள்ளன.

2 விக்கெட்



இந்தியாவும், பாகிஸ்தானும் 1947, 1965, 1971, 1999 என நான்கு போர்களில் ஈடுபட்டுள்ளன.

இதில் மூன்று போர்கள், காஷ்மீர் மீதான ஆசையால், பாகிஸ்தான் அத்துமீறி போரில் ஈடுபட்டு, மண்ணைக் கவ்விக்கொண்டவை. 1971ம் ஆண்டு நடந்த இந்திய - பாக்., போர் வங்கதேசம் உருவாக காரணமானது.

அதே வங்கதேசம் இன்று, பாகிஸ்தானுடன் சேர்ந்தது, வளர்த்த கடா மார்பில் பாயும் கதையாக, இந்தியா மீது போர் தொடுக்க கங்கணம் கட்டியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா வலுவான பதிலடி தர விரும்புகிறது. 2016 மற்றும் 2019ல் நடந்தது போல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போன்ற டிரைலர்களாக இருக்காது. இது துல்லிய தாக்குதல்களாக தான் இருக்கும்.


இதில், விழப்போகும் விக்கெட்டுகள், பயங்கரவாதி ஹபிஸ் சயீத், ராணுவ தளபதி முல்லா முனீர் (எ) அசிம் முனீர் ஆகியோராக தான் இருக்கும் என, பாகிஸ்தானியர்களே நம்புகின்றனர். காரணம், பஹல்காம் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர்கள் இவர்கள் என்பதை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.

-நமது நிருபர்-

Advertisement