ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?

புதுடில்லி: பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்:
ஆபரேஷன் சிந்துார் குறித்து தற்போது கேள்விப்பட்டேன். தாக்குதல் குறித்து ஏதோ நடக்கப் போகிறது என்பது மக்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இரு நாடுகளும் பல ஆண்டுகளாக தங்களின் பிரச்னைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த தாக்குதல் மிக விரைவாக முடிவடையும் என்று நம்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா வெளியுறவு அமைச்சகம்
:
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆழமடைந்து வரும் ராணுவ மோதல் குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம், இரு நாடுகளும் நிதானத்தைக் காட்ட வேண்டும்.இரு நாடுகளுடனும் அன்பான உறவுகளைக் கொண்டிருக்கிறோம், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம். இவ்வாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம்:
இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவிக்கிறோம். மேலும் தற்போதைய நிலவரம் குறித்து கவலை கொண்டுள்ளோம். நாங்கள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவும், அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில்,
ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாதச் செயலைப் பொறுத்தவரை, நமது நாடு இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை உறுதியாகக் கண்டிக்கிறது. மேலும், இந்தச் சூழ்நிலை மேலும் பழிவாங்கும் பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் முழு அளவிலான ராணுவ மோதலாக விரிவடையக்கூடும் என்று நாங்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.
தெற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு யோஷிமாசா ஹயாஷி கூறினார்.




