முதல்வர் மருந்தகத்திற்கு செல்லும் மக்கள் அதிருப்தி ; தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை

திருவாடானை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதால் நோயாளிகள் அதிக விலை கொடுத்து மற்ற தனியார் மருந்து கடைகளில் வாங்கும் நிலை ஏற்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருவாடானை தாலுகாவில் கோனேரிகோட்டை கூட்டுறவு சங்கம் சார்பில் திருவாடானையிலும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் வலமாவூர் கூட்டுறவு சங்கம் சார்பில் திருப்பாலைக்குடியிலும், தனியார் தொழில் முனைவோர் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் ஆகிய நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் கடந்த பிப்.,24 ல் திறக்கப்பட்டது.

தரமான மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவது இந்த மருந்தகத்தின் நோக்கம். ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. அதில் பெரும்பகுதி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கள் சார்ந்தே உள்ளது.

குழந்தைகளுக்கான திரவ மருந்துகள் குறைவாக உள்ளது. மொத்தமுள்ள 200க்கும் மேற்பட்ட வகையான மருந்துகளில் 20 முதல் 30 சதவீதமான மருந்துகளே இருப்பில் உள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், சுகர், ரத்த அழுத்தம் மருந்துகள் தான் உள்ளன. அந்த மருந்துகளை எத்தனை பேர் வாங்குவார்கள்.

அந்தந்தப் பகுதியில் உள்ள டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுக்கேற்ப மருந்து, மாத்திரைகள் முதல்வர் மருந்தகத்தில் இல்லை. குறிப்பிட்ட 10 வகை நோய்களுக்கான மாத்திரைகள் தான் உள்ளன. மாத்திரை சீட்டு கொண்டு சென்றால் பாதி வாங்கிவிட்டு, மீதி மாத்திரைக்கு வேறு மருந்துகடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மலிவு விலைக்கு மருந்துகள் விற்பது நல்ல விஷயம் தான். அதே நேரம் அனைத்து நோய்களுக்கான மாத்திரைகளையும் இருப்பு வைத்தால் தான் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

--

Advertisement