அரசின் இலவச சேலைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகரிக்கப்படுமா; சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி, பெடல் தறி நெசவாளர்களுக்கு அரசின் இலவச சேலைகள் உற்பத்திக்கு கூடுதல் ஆர்டர்கள் அதிகரிக்கப்படுமா என நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஏழு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசின் இலவச சேலைகள் உற்பத்தி செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசுக்கு கொடுக்கின்றனர். இலவச சேலைகள் உற்பத்திக்கு முன்கூட்டியே தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நுால்துறை மூலம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்திக்கான ஆர்டர் வழங்கப்படும். இதன் அடிப்படையில் நெசவாளர்களுக்கு சேலைகள் உற்பத்திக்கு தேவையான நூல் வழங்கப்படும். உற்பத்தி செய்த சேலைகளுக்கு அந்தந்த வாரத்தில் கூலியும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும்.

வேலை இன்றி பாதிப்பு



உற்பத்தியான சேலைகள் கொள்முதலுக்குப் பின் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு தைப்பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும். கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு தற்போது குறைவான எண்ணிக்கையில் உற்பத்திக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி திட்டம் நிறைவடைந்த பின் தொடர்ச்சியாக தொழிலுக்கு வழி இன்றி நெசவாளர்கள் பாதிப்படைகின்றனர். இதனை தவிர்க்க சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதலான எண்ணிக்கையில் உற்பத்திக்கான ஆர்டர் வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

31 ஆயிரம் சேலைக்கு ஆர்டர்



கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் தொடங்கி டிசம்பர் முடிய இலவச சேலைகளுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 25 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டது. இந்த உற்பத்தி முன்கூட்டியே முடிந்ததால், நெசவாளர்களுக்கு இலவச சீருடை உற்பத்திக்கான ஆர்டர் வழங்கப்பட்டது. சீருடை உற்பத்தியில் போதுமான கூலி கிடைப்பது இல்லை. கூட்டுறவு சங்கத்திற்கும் இந்த உற்பத்தியால் ஆதாயம் இல்லை. நடப்பு ஆண்டில் பெடல் தறிகளில் 26 ஆயிரம், கைத்தறிகளில் 5000 சேலைகள் உற்பத்திக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

குறைவான எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்ட இந்த சேலைகள் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே முடிந்துவிடும். நலிவடைந்த சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான சேலைகள் உற்பத்திக்கு ஆர்டர் கிடைக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement