திருபுவனை கொள்ளை வழக்கு: விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் கைது

திருபுவனை : புதுச்சேரி, மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் உள்ள கே.குச்சிப்பாளையம், கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி 70; விவசாயி.

இவரது மனைவி தனபாக்கியம், 65. கடந்த மாதம் 24ம் தேதி இருவரும் வெளியே சென்றிருந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 10 சவரன் நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.8.80 லட்சமாகும்.

புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதில், புதுச்சேரி மேற்குப் பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதகடிப்பட்டு, ஆண்டியார்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி காமன்கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சந்தோஷ்குமார், 37; பெருமாள் கோவில் தெரு ரகுபதி மகன் கிருபாகரன் 35; என்பதும், இருவரும் தண்டபாணி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமார் மற்றும் கிருபாகரன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஸ்கூட்டி மற்றும் இரண்டு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement