இந்தியாவை வென்றது இலங்கை: பெண்கள் ஒருநாள் போட்டியில்

கொழும்பு: முத்தரப்பு லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.


இந்திய அணிக்கு பிரதிகா (35), ஸ்மிருதி மந்தனா (18) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹர்லீன் தியோல் (29), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (30), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (37) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ரிச்சா கோஷ் (58) அரைசதம் கடந்தார். தீப்தி சர்மா (24), காஷ்வீ (17) ஆறுதல் தந்தனர். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஹாசினி (22), விஷ்மி (33) ஜோடி நம்பிக்கை அளித்தது. ஹர்ஷிதா (53) அரைசதம் விளாசினார். கேப்டன் சமாரி (23), கவிஷா (35) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய நிலக் ஷிகா (56) அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. பிரதிகா வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அனுஷ்கா வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அனுஷ்கா (23), சுகந்திகா (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஸ்னே ராணா 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஏழு ஆண்டுகளுக்கு பின்...பெண்கள் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை வீழ்த்தியது. கடைசியாக 2018ல் இந்தியாவை வென்றிருந்தது.
* இது, இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் 3வது வெற்றியானது. இவ்விரு அணிகள் மோதிய 34 ஒருநாள் போட்டியில், இந்தியா 30, இலங்கை 3ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.




மந்தனா '100'


இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தனது 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இம்மைல்கல்லை எட்டிய 7வது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே இந்தியாவின் மிதாலி ராஜ் (232 போட்டி), ஜுலன் கோஸ்வாமி (204), ஹர்மன்பிரீத் கவுர் (144), அஞ்சும் சோப்ரா (127), அமிதா சர்மா (116), தீப்தி சர்மா (104) ஆகியோர் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர்.

Advertisement