குற்ற சம்பவங்களை தடுக்க மடிப்பாக்கத்தில் 24 'சிசிடிவி'க்கள்
மடிப்பாக்கம்:மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில், குற்ற சம்பவங்களை தடுக்க, புதிதாக 24 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றை இயக்கி வைக்கும் நிகழ்வு, சில நாட்களுக்கு முன், மகாலட்சுமி நகர் பிரதான சாலையில் நடந்தது.
இதில், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பங்கேற்று, சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
நலச்சங்கங்களின் சார்பில், இங்கு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை போலீசார் கண்காணிப்பர்.
குற்ற சம்பவம் நடக்கும் போது, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார், உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பர்.
உங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், உதவி கமிஷனர் முத்துராசா, மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், நலச்சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
அதேபோல், மடிப்பாக்கம் பாரத் நகர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திலும், துணை கமிஷனர் சீனிவாசன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.