பரந்துாருக்கு நேரடி அரசு பஸ் இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரை சுற்றியுள்ள சில கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியில், பரந்துார் பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இருப்பினும், பரந்துார் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி அறவே இல்லை.

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, செல்லம்பட்டிடை, அக்கமாபுரம், வரதாபுரம் உள்ளிட்ட கிராமப்புற பேருந்துகளின் வாயிலாகவே, கிராமப்புற மக்கள் காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார் மற்றும் பரந்துாரில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு சென்று வந்தனர்.

இதில், வரதாபுரம் கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண்- 49 அரசு பேருந்து, 'கொரோனா' கால கட்டங்களில் நிறுத்தப்பட்டது. அதன் பின் சேவை இயக்கவில்லை.

இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார் செல்வோர் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, பரந்துார் கிராமத்திற்கு நேரடி பேருந்து சேவை துவக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமப்புற மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement