கோல்கட்டா அணி 'திரில்' வெற்றி: ஒரு ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்தியது

கோல்கட்டா: கடைசி பந்து வரை பதட்டமான பிரிமியர் லீக் போட்டியில், கோல்கட்டா அணி ஒரு ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. 25 பந்தில் 57 ரன் விளாசிய ரசல், வெற்றிக்கு கைகொடுத்தார். ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் (95 ரன்) ஆட்டம் வீணானது.
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் (பகலிரவு) ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் ரகானே, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
22 பந்தில் அரைசதம்: கோல்கட்டா அணிக்கு நரைன் (11), குர்பாஸ் (35), ரகானே (30) பெரிதாக சோபிக்கவில்லை. 13 ஓவரில் 111/3 ரன் தான் எடுத்திருந்தது. பின் ரசல், ரகுவன்ஷி அசத்தினர். தனது முதல் 9 பந்தில், ரசல் 2 ரன் மட்டுமே எடுத்திருந்தார். மத்வால் ஓவரில் (16வது) 15 ரன் (4, 6, 4) விளாசி, அதிரடியை துவக்கினார். தீக் ஷனா ஓவரில் (18) 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார். ரகுவன்ஷி, 44 ரன்னுக்கு அவுட்டானார். மணிக்கு 148 கி.மீ., வேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரசல், 22 பந்தில் அரைசதம் எட்டினார். இது, இத்தொடரில் இவரது முதல் அரைசதம். சிறந்த 'பினிஷரான' ரிங்கு சிங் 6 பந்தில் 19 ரன் விளாசினார். கடைசி 5 ஓவரில் 85 ரன் எடுக்கப்பட்டன. கோல்கட்டா அணி 20 ஓவரில் 206/4 ரன் குவித்தது. ரசல் (57, 4X4, 6X6), ரிங்கு சிங் (19, 1X4, 2X6) அவுட்டாகாமல் இருந்தனர்.
நழுவிய பராக் சதம்: கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி. வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் இளம் வைபவ் சூர்யவன்ஷி (4) அவுட்டானார். குனால் சிங்(0) ஏமாற்றினார். ஜெய்ஸ்வால் (34) நிலைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவரில் (8வது) துருவ் ஜுரல் (0), ஹசரங்கா (0) அவுட்டாகினர். 8 ஓவரில் 72/5 ரன் எடுத்து தவித்தது. தனிநபராக கேப்டன் ரியான் பராக் மிரட்டினார். மொயீன் அலி ஓவரில் (13வது) 5 சிக்சர் விளாசினார். ஹெட்மெயர், 29 ரன் எடுத்தார். ஹர்ஷித் ராணா பந்தில் அவுட்டான பராக் (95, 6x4, 8x6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
ரகானே வியூகம்: ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 22 ரன் தேவைப்பட்டன. வைபவ் அரோரா பந்துவீசினார். முதல் இரு பந்தில் ஆர்ச்சர் 3 ரன் எடுத்தார். அடுத்து சுபம் துபே வரிசையாக 6, 4, 6 என விளாச, பதட்டம் அதிகரித்தது. கடைசி ஒரு பந்தில் 3 ரன் தேவை. இந்த தருணத்தில் கேப்டன் ரகானே அருமையாக பீல்டிங் 'செட்' செய்தார். 'லாங்-ஆப்'ல் சிறந்த 'பீல்டரான' ரிங்கு சிங்கை நிறுத்தினார். அரோரா வீசிய பந்தை அடித்துவிட்டு 1 ரன் ஓடினார் சுபம். 2வது ரன்னுக்கு ஓடிய போது, 'லாங்-ஆப்' திசையில் இருந்து ரிங்கு சிங் துல்லியமாக பந்தை த்ரோ செய்ய, ஆர்ச்சர் (12) ரன் அவுட்டானார். மொத்தம் 20 ரன் மட்டும் எடுக்கப்பட, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 205/8 ரன் எடுத்து, தோல்வி அடைந்தது. சுபம்(25) அவுட்டாகாமல் இருந்தார். ஒரு ரன்னில் வென்ற கோல்கட்டா அணி, 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான் ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்துவிட்டது.
ஆட்டநாயகன் விருதை ரசல் வென்றார்.
1000 ரன்
'டி-20' அரங்கில் ஈடன் கார்டன் மைதானத்தில் 1000 ரன்னுக்கு மேல் எடுத்தவர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் ரசல். 42 இன்னிங்சில் 1047 ரன் எடுத்துள்ளார். முதல் இரு இடங்களில் காம்பிர் (50 இன்னிங்ஸ், 1462 ரன்), உத்தப்பா (41 இன்னிங்சில், 1160) உள்ளனர்.
ஒரு ஓவரில் 5 சிக்சர்
கோல்கட்டாவின் மொயீன் அலி ஓவரில் (13வது) 5 சிக்சர் விளாசினார் ராஜஸ்தானின் பராக். இதன் மூலம் பிரிமியர் அரங்கில் ஒரு ஓவரில் 5 சிக்சர் விளாசிய 5வது வீரரானார்.
* பிரிமியர் அரங்கில் 2வது முறையாக ஒரு ரன்னில் வென்றது கோல்கட்டா. இதற்கு முன் பெங்களூருவுக்கு எதிராக (2024) ஒரு ரன்னில் வென்றது.
* ராஜஸ்தான் அணி 3வது முறையாக ஒரு ரன்னில் தோற்றது. முன்னதாக டில்லி (2011), ஐதராபாத்திற்கு (2024) எதிராக ஒரு ரன்னில் வீழ்ந்தது.
மேலும்
-
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'வலை'
-
கார் - டூவீலர் மோதல் தந்தை, மகள் பலி
-
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது
-
முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி
-
மது போதையில் 12 பேர் மீது காரை ஏற்றிய இளைஞர் கைது: ஒருவர் பலி கொலை வழக்காக மாற்றம்
-
காட்டெருமையை சுட்டுக்கொன்ற 2 பேர் சிக்கினர்