கார் - டூவீலர் மோதல் தந்தை, மகள் பலி

பூவந்தி: சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கார் மோதியதில் டூவீலரில் சென்ற தந்தை பொன்ராஜ் 30, மகள் அனுசியா 6, பலியாகினர். பொன்ராஜ் மனைவி பிரதீபா 27, படுகாயமடைந்தார்.

பூவந்தி அருகே ஏனாதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி பிரதீபா. மகள் அனுசியா. பொன்ராஜ்சிங்கப்பூரில் பணிபுரிந்தார். அடிக்கடி சொந்த ஊருக்கு வரும் பொன்ராஜ், தற்பொழுது ஒரு மாதத்திற்கு முன் ஊருக்கு வந்தார். நாளை (மே 6) மீண்டும் சிங்கப்பூர் செல்வதாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை மதுரைக்கு பொருட்கள் வாங்க தனது டூவீலரில் மனைவி, மகளுடன் ஏனாதியில் இருந்து சென்றார். பூவந்தி தனியார் நர்சிங் கல்லுாரி அருகே ஆட்டோவை முந்த முயற்சித்தார். அப்போது மதுரையில் இருந்து காளையார்கோவில் நோக்கி வந்த கார், டூவீலரில் நேருக்கு நேர் மோதியது. இதில் தந்தை, மகளும் பலியாயினர்.

பலத்த காயமடைந்த 5 மாத கர்ப்பிணியான பிரதீபா, மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் டிரைவர் ராஜபாண்டியிடம் பூவந்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement