கோவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி புள்ளி!

''டெண்டர் மதிப்பு எகிறிட்டே போகுது வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., சார்புல, 'வட சென்னை வளர்ச்சி திட்டம்' உட்பட பல பெயர்கள்ல உள்கட்டமைப்பு பணிகள் நடக்கு... இந்த திட்டங்களை அறிவிக்கும் போது ஒரு மதிப்பு குறிப்பிடுதாவ வே...
''ஆனா, டெண்டர் விட்டு பணிகளை துவங்குறப்ப, அதன் மதிப்பு 100 சதவீதம் எகிறிடுது... இப்படி, 500 கோடி ரூபாய்க்கு மேல், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளே, தன்னிச்சையா பணி மதிப்பீடுகளை உயர்த்தியிருக்காவ வே...
''சமீபத்தில் நடந்த குழும கூட்டத்தில், இப்படி உயர்த்திய திட்ட மதிப்பீடுகளுக்கு பின்னேற்பு அனுமதி கேட்டிருக்காவ... நிதி துறையில் இருந்து வந்த அதிகாரி, இதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு வே...
''ஆனா, 'சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் செஞ்சது தான் சரி'ன்னு அதன் முன்னாள் உறுப்பினர் செயலர் வாதிட்டிருக்காரு... கடைசியா, 'வரும் காலங்களில் இப்படி செய்யக்கூடாது'ன்னு சொல்லி பிரச்னையை முடிச்சிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''போலி சான்றிதழ் குடுத்து மாட்டிக்கிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், மணியாச்சி கிராமத்தில், 1.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்குல, சிலர் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயரில், இறப்பு சான்றிதழ் வாங்கியிருக்காங்க... அப்புறமா, அவருக்கு ரெண்டு பெண் வாரிசுகள் இருக்கிறதா, வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்க பா...
''இதை வி.ஏ.ஓ.,வும், ஆர்.ஐ.,யும் நிராகரிச்சுட்டாங்க... ஆனா, அவங்களுக்கு மேல இருந்த தாலுகா அதிகாரி, 'கவனிப்பு' காரணமா, போலியா வாரிசு சான்றிதழ் குடுத்துட்டாரு... இதை வச்சு, அந்த நிலத்தையும் வித்துட்டாங்க பா...
''இப்ப, பாதிக்கப்பட்டவங்க தந்த புகாரின்படி, விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு போட்டிருக்காரு... இதனால, தாலுகா அதிகாரி, தன்னை காப்பாற்றும்படி தன் சமுதாய பிரமுகர்கள் உதவியை நாடியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆனந்த், இந்த பேப்பரை அங்க வையும்...'' என, நண்பரை ஏவிய குப்பண்ணாவே, ''பெண் அதிகாரியை மிரட்டியிருக்கார் ஓய்...'' என்றார்.
''யாருங்க அந்த ஆளுங்கட்சி புள்ளி...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலம், திருப்பூர், தொட்டிபாளையம் கிராமத்தில் இருக்கு... இந்த நிலத்துல கோவில் கட்டி, வருவாயை பெருக்க அறநிலையத்துறை பெண் அதிகாரி திட்டமிட்டு, மண் பரிசோதனை நடத்த போயிருக்காங்க ஓய்...
''ஆனா, அப்பகுதி மக்கள் அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்கா... 'நாங்களே இங்க கோவில் கட்டப் போறோம்... நீங்க வேணும்னா உண்டியல் வச்சுக்கலாம்'னு சொல்லியிருக்கா ஓய்...
''பெண் அதிகாரியின் மொபைல் போனுக்கு வந்த திருப்பூர் ஆளுங்கட்சி புள்ளி, 'உங்க அமைச்சர்கிட்ட நான் பேசிக்கறேன்... நாங்க கோவில் கட்டப் போறோம்... நானே நாளைக்கு சிலை வைப்பேன்... நீங்க இடத்தை காலி பண்ணுங்க'ன்னு கோபமா சொல்லியிருக்கார் ஓய்...
''பதறிப் போன பெண் அதிகாரி, போலீஸ்ல புகார் குடுத்துட்டாங்க... போலீசார், தாசில்தார் வந்து பேச்சு நடத்தி, தற்போதைக்கு பிரச்னையை தள்ளி போட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''செல்வராஜ் வர்றாரு... இடம் குடுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
