விலங்கியல், தாவரவியல் எளிமை; இயற்பியல் 'இனிக்கவில்லை'

'நீட்' தேர்வெழுதிய மாணவ, மாணவியர் பேட்டி:



விஜயஹரிதா, ஊத்துக்குளி:

விலங்கியல், தாவரவியல் பகுதி பரவாயில்லை; வினாக்கள் எளிமையாக இருந்தது; இயற்பியல் அதிகம் யோசிக்க வைத்தது. தேர்ச்சிக்கு, தகுதிக்குரிய மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

விக்னசக்தி, உத்தமபாளையம், வெள்ளகோவில்:

இயற்பியலில் கேள்விகள் இவ்வாறு இடம் பெறுமென எதிர்பார்க்கவில்லை. வினாத்தாள் பார்த்தவுடன் சற்று கஷ்டமாக இருந்தது. நிதானித்து பின் தேர்வெழுத துவங்கினேன். விலங்கியல், தாவரவியல் பகுதியில் முழுமையாக விடை எழுத முடிந்தது.

கனிஷ்கா, சாவக்காட்டுப்பாளையம், சேவூர்:

தாவரவியல், விலங்கியல் பகுதியில் வினாக்கள் முழு மதிப்பெண் பெறும் வகையில் இருந்தது. இயற்பியல் பகுதி கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

கவுதம், அவிநாசி:

தேர்வு நேரத்தில் பாதியை இயற்பியல் வினாக்களேஎடுத்துக் கொண்டது. மீதமுள்ள நேரத்தில் தான் மற்ற பகுதி கேள்விகளுக்கு விடையெழுத முடிந்தது. நன்கு படித்திருந்தாலும், இயற்பியலில் முழுமையாக விடை எழுதுவது கஷ்டம் தான்.

நித்திஷ், கணபதிபாளையம்:

இயற்பியல், வேதியியல் கேள்விகள் எதிர்பார்த்தவை இல்லை. கடினமாக இருந்தது; யோசித்து ஒவ்வொன்றும் நேரம் போதியதாக இல்லை. முதல்முறை 'நீட்' தேர்வு என்பதால், பதட்டமும் சற்று ஏற்பட்டது. நேரத்தை கணக்கிட்டு தேர்வெழுதியிருக்க வேண்டும்.

கோகுல், வாவிபாளையம்:

இயற்பியலில் நேரடி கேள்விகளே இல்லை. பல கேள்விகள் கணக்குகளுடன் சுற்றிவளைத்து விடைஎழுதும் வகையில் கேட்டதால், ஒவ்வொரு கேள்விக்கும் 'பிராப்ளம் சால்விங்' செய்து அதன் பின் விடையளிக்க கூடுதல் நேரம் பிடித்தது; எனக்கு நேரம் போதவில்லை.

சாருமதி, பொங்கலுார்:

இயற்பியலை முழுமையாக படித்தவர்கள் மட்டுமே விடையெழுதும் வகையில் கேள்விகள் மிக கடினமாக இருந்தது. வேதியியல் பரவாயில்லை. விலங்கியல், தாவரவியல் எளிதாக இருந்தது.

அக் ஷதி, பி.கே.ஆர்., காலனி:

இயற்பியல் முழுதும் யோசித்து விடையெழுதும் வகையில் இருந்தது. பயிற்சி மையங்களில் வழிமுறைகளை பின்பற்றி சரிவர, முழுமையாக படித்தவர்களுக்கு தேர்வு சற்றுஎளிதாக இருந்திருக்கும். விலங்கியல், வேதியியல், தாவரவியல் முழு மதிப்பெண் எடுக்க முடியும்.

ஜனனி, பட்டுக்கோட்டை:

வேதியியல் கடினமாக இருக்கு மென எதிர்பார்த்தேன். மாறாக இயற்பியல் பகுதியில், 30க்கும் அதிகமான வினாக்கள் கடினமாக அமைந்து விட்டது. தாவரவியல், விலங்கியலில் பெறும் மதிப்பெண்களை வேதியியலில் பெற முடியாது.

ஷிபா, திருச்செங்கோடு:

வினாத்தாளை பார்த்ததும், வேதியியல் கேள்வி மிக கடினமாக இருந்தது. முதலில் பிற பகுதிக்கு விடையளித்து விட்டு, பின் இயற்பியல் பகுதிக்கு விடை எழுதினேன்.இயற்பியல் பகுதியில் இப்படி கேள்விகள் இடம் பெறுமென எதிர்பார்க்கவில்லை.

Advertisement