வறுத்தெடுத்த 'கத்திரி வெயில்'

திருப்பூர்;திருப்பூரில் நேற்று 'கத்திரி' வெயில் மக்களை வறுத்தெடுத்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கம் குறைந்தது.

நேற்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது; வரும், 28ம் தேதி வரை, தொடர்கிறது. திருப்பூரை பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைதான், வடமாநில தொழிலாளர்களுக்கு 'ஷாப்பிங் டே'.

அன்று மட்டும் வெளியே வந்து, ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேன்சி பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். நேற்று வெயில் கடுமையாக இருந்ததால், வடமாநில தொழிலாளர்கள் வெளியே தலைகாட்டவில்லை.

நேற்று காலை முதல் வெயில் கடுமையாக இருந்ததால்,சாலையோர பின்னலாடை விற்பனை கடைகளும், காதர்பேட்டை கடைகளும் காற்று வாங்கின.

நேற்று மதிய நேரம், குமரன்ரோடு, காமராஜர் ரோடு, அவிநாசிரோடு, பி.என்.,ரோடு பகுதிகள், நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. வெயில் அதிகமாக இருந்ததால், குடை பிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் மக்கள் நடமாடினர்.

நீர்மோர் பந்தல்,தண்ணீர் பந்தல்கள் இருந்தாலும், ரோட்டோரமாக இயங்கும் கம்மங்கூழ், சர்பத், சாத்துக்குடி ஜூஸ் கடைகளில், மக்கள்கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மாலையில் குளுகுளு

நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் வெயில் திடீரென தணிந்து, மேகமூட்டம் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் துாறல் மழை பெய்தது. வடமாநில தொழிலாளர் மாலை நேரத்துக்குப் பின், 'ஷாப்பிங்' செய்ய வந்திருந்தனர்.

Advertisement