'டவுட்' தனபாலு

1

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ஆர்.எஸ்.எஸ்., கோட்பாட்டை இந்தியா மீது திணிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஹிந்துத்துவ சக்திகளை எதிர்க்கவும் முடிவெடுத்து தான், தி.மு.க.,வுடன் கரம் கோர்த்துள்ளோம். கொள்கை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. பதவிக்காக கணக்கு போட்டு தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., தொடரும்; நீடிக்கும்.

டவுட் தனபாலு: தமிழக அரசியல் கூட்டணி களத்தில், த.வெ.க., - நாம் தமிழர் கட்சி, பா.ம.க., அவ்வளவு ஏன், தே.மு.தி.க.,வுக்கு இருக்கிற, 'மவுசு' கூட உங்க கட்சிக்கு இல்லையே... அதனால, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறினாலும், உங்களை சேர்த்துக்க எந்த கட்சியாவது முன்வருமா என்பது, 'டவுட்'தான்!



பத்திரிகை செய்தி:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் உள்ள லட்சுமிராம் தியேட்டரில், எங்கடா உங்க மந்திரி என்ற தெலுங்கு டப்பிங் படம் திரையிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியான தி.மு.க.,வினர், போஸ்டரில் படத்தின் தலைப்பை பேப்பர் ஒட்டி மறைத்தனர். பயந்துபோன தியேட்டர் நிர்வாகம், படத்தையே மாற்றி விட்டது.

-டவுட் தனபாலு:
காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, செந்தில் பாலாஜி ராஜினாமா பண்ணிய உடனேவா, அந்த படம் வெளியாகும். இந்த நேரத்துல, இந்த படத்தை வெளியிட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் சதி இருக்குமோ என்ற, 'டவுட்' தி.மு.க.,வினருக்கு வரலையா?


மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாநில செயலர் கோபிகுமார்: சிங்காரவேலர், ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை திருத்தி, அதை நான்கு தொகுப்புகளாக மத்திய அரசு சுருக்கியுள்ளது. இதில், தொழிற்சங்கம் அமைக்க உரிமம் ரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

டவுட் தனபாலு: அது சரி... இந்த மாதிரி போராட்டங்களை நடத்தி, எந்த பலனாவது உங்களுக்கு கிடைச்சிருக்குதா... 'நாட்டுல நாங்களும் இருக்கோம்'னு கணக்கு காட்டுறதுக்காகவே, அப்பப்ப போராட்டங்கள் நடத்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

Advertisement