அ.தி.மு.க.,வினருக்கு பேச கற்றுக்கொடுங்கள்!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சமீபத்தில் தன் இல்லத்தில், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்தளித்துள்ளார்.
இப்படி உற்சாகப்படுத்தும் அளவிற்கு, சட்டசபையில் அப்படி ஒன்றும் அவர்கள் சிறப்பாக பணி செய்து விடவில்லையே!

ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்முனையில் இருந்து வரும் கேள்விகளுக்கு திறமையாக பதில் சொல்ல வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளுங்கட்சியை கேள்விகளால் திணறடிக்க வேண்டும். ஆனால், இவர்களோ, 'யாருக்கு வைத்த விருந்தோ' என்பது போல் அல்லவா கேள்விகளை எதிர்கொண்டனர்!

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், எம்.எல்.ஏ.,க்களான திருப்பூர் மணிமாறன், எஸ்.ஆர்.ராதா, மார்கபந்து, கோவை தம்பி, தாமரைக்கனி போன்றோர், தி.மு.க.,விடம் இருந்து வரும் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்வர். அதை மிகவும் ரசிப்பார், எம்.ஜி.ஆர்.,!

அதேபோன்று தான் ஜெயலலிதாவும்!

எதிர்க்கட்சியினர் கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சரியான பதிலை தரவில்லை என்றால், சபை நேரம் முடிவதற்குள் அவரது பதவியும் முடிவிற்கு வந்து விடும்.

அதனாலேயே தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் போல் சட்டசபை கூடும் தேதி வெளியானாலே அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் துாக்கத்தையே இழந்து விடுவர்.

ஆனால் இன்றோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டில்லி சென்ற பழனிசாமி குறித்து, 'உங்க கூட்டணி கணக்கை, எங்கோ அமர்ந்து கொண்டு ஒருவர் போட்டுக்கொண்டு இருக்கிறார்' என கிண்டலடித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, 'அந்த ஒருவர் போடும் கூட்டணி கணக்கை எங்கள் பொதுச்செயலர் பார்த்துக் கொள்வார். பட்ஜெட் கணக்கை மட்டும் நீங்கள் பாருங்கள்' என்று, அ.தி.மு.க.,வினர் ஒருவர் கூட பதிலடி கொடுக்கவில்லை.

அதேபோன்று, 'ஆட்சியில் இருந்தபோது, 11 மருத்துவ கல்லுாரியை மத்திய அரசிடம் இருந்து வாங்கி கொண்டு, 'நீட் தேர்வை நீங்க நடத்திக்கோங்க' என்று, தமாசு நடிகர் வடிவேலு ஒரு படத்தில் பேக்கரி டீலிங் பேசியது போல் நடந்துள்ளது' என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

ஆபாச காமெடியை, நீட் தேர்வுடன் ஒப்பிட்டு பேசிய சிவசங்கரின் பேச்சை, அவைக் குறிப்பில் இருந்து நீக்கச் சொல்லி போராடி இருக்க வேண்டும். ஆனால், அதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல், சவுக்கு சங்கருக்காக வெளிநடப்பு செய்தனர்.

ஆளுங்கட்சியின் கேள்விகளை அவர்களிடமே திருப்பி, மக்கள் பிரச்னை குறித்து, தி.மு.க.,வை கேள்விகளால் மிரள விட்டிருந்தால், சபையின் கடைசி நாளன்று,'தவழ்ந்து, ஊர்ந்-து' என பழனிசாமியை ஏளனமாக பேசியிருக்க மாட்டார், ஸ்டாலின்.

இப்படி தங்கள் கடமையை சரியாக செய்யாத எம்.எல்.ஏ.,க்களுக்கு, பழனிசாமி பிரியாணி விருந்து கொடுப்பதை விட, சட்டசபையில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுக்கலாம்!


உத்தரவிடுவாரா நிதியமைச்சர்?



எஸ்.முத்து வெங்கட்ராமன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டும் என்றால், பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு முக்கியத்துவம் தந்து, அவை சரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அதே சமயம், அவற்றை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளால், சாமானியர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை!

'நகைக்கடனால் வங்கிகள் திவாலாகி விடக்கூடாது' என்கிறார் நிதியமைச்சர். அவரது அச்சம் நியாயமானது. அதேநேரம் ஏழைகள் நிலைமையையும் யோசிக்க வேண்டும்.

தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வாங்குவதால் தான், ஏழைகள் வங்கிகளை தேடி வருகின்றனர். நகைக் கடனை திருப்பி செலுத்த, 12 மாதங்கள் தான் அவகாசம் என்ற அளவில் நிதியமைச்சரின் நிலைப்பாடு சரியே!

ஆனால், வட்டியை செலுத்தி, கடனை புதுப்பித்துக்கொள்வதில் என்ன பிரச்னை? வங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி வந்து விடுகிறது; நகையும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொடுத்த கடனை விட, 30 சதவீதம் அதிக அளவில் வங்கி வசம் தங்கம் இருக்கும்போது, நகைக்கடனால் வங்கி எப்படி திவால் ஆகும்?

ஒரு வங்கி திவால் ஆகிறது என்றால், அரசியல்வாதிகள் மற்றும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, முகுல் சோக்சி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு கொடுத்த ஈடு பெறப்படாத கடனாக இருக்குமே தவிர, நகைக்கடனாக இருக்காது.

எனவே, நகைக்கடன் புதுப்பித்தலில் தற்போதுள்ள விதிகளே தொடர அமைச்சர் உத்தரவிட வேண்டும்.

அதேபோன்று, தனியார் கடன் நிறுவனங்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள கேரள நிதி நிறுவனங்கள் ஆன் - லைனில் பணம் பெறுவதில்லை. இது அவர்களிடம் வெளிப் படை தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.

இதற்கும் நிதியமைச்சர்கடிவாளம் போட வேண்டும்!

சங்கங்கள் முட்டி மோதட்டும்!



ஆர்.சுப்பையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்வதை தவிர்க்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்த வழி தான் விதி- 110ன் கீழ் சட்டசபையில் அறிவிப்பது!

நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே, அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இடையே பிரிவினையை உண்டாக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செய்யப்பட்டது தான், மானிய கோரிக்கையில், விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்புகள்!

அரசு எதிர்பார்த்தது போல் சங்கங்களிடையே பிரிவினையும், குழப்பமும் உண்டாகி விட்டது.

தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலர் சங்கரலிங்கம் ஆகியோர், 'அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக' கூறுகின்றனர்.

தமிழக பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், 'முதல்வர் அறிவித்தவைகளில் எட்டு, உடனடியாக பலன் அளிக்க கூடியவை'என்கிறார்.

தமிழக அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ் ராஜேஸ்வரி ஆகியோர், 'சரண் விடுப்பு அறிவிப்பு நாடகம் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். மொத்தத்தில், முதல்வரின் அறிவிப்பு, அரசு ஊழியர்களை கடனாளியாக்குவதாக உள்ளது' என்கின்றனர்.

தமிழக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், 'முதல்வர் அறிவித்துள்ள சில அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. முதல்வர் உறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தீவிரமடையும்' என்கிறார்.

ஒன்றாக திரண்ட சங்கங்கள் இடையே பிரிவினையை விதைத்தாகி விட்டது. இனி, அவர்களுக்குள் முட்டி, மோதிக் கொண்டு இருப்பர்; தி.மு.க., தலைமை எந்த இடையூறும் இல்லாமல், சட்டசபை தேர்தலை கவனிக்கும் அல்லவா?

Advertisement