மெழுகுவர்த்தி உற்பத்தியில் சாதிக்கும் ஸ்ரீவித்யா

'மனம் இருந்தால், மார்க்கம் உண்டு' என்பது பழமொழி. மன உறுதி, விடா முயற்சி, அயரா உழைப்பு என, மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடி வரும். இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் ஸ்ரீவித்யா.

கொரோனா தொற்று பரவிய போது, மக்கள் பட்டபாடு சொல்லி மாளாது. உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்ந்தனர். மாதக்கணக்கில் லாக் டவுன் அமலில் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. லட்சக்கணக்கானோருக்கு வேலை பறிபோனது. வருவாய்க்கு வழியின்றி அவதிப்பட்டனர். இப்படி அவதிப்பட்டவர்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர்.

மைசூரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவரும் கொரோனா நேரத்தில் வேலையை இழந்தார். வருமானத்துக்கு வழியில்லாமல் என்ன செய்வது என, ஆலோசித்தார். அதன்பின் வீட்டிலேயே சிறிய அளவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலை துவக்கினார். அந்த சிறிய தொழில், இன்று பத்து பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 'அவுரா கேண்டில்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் துவங்கி, வெற்றிகரமாக நடத்துகிறார்.

ஸ்ரீவித்யா தயாரிக்கும் மெழுகுவர்த்திகள், சாதாரணமானவை அல்ல. மிகவும் சிறப்பானவை. அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு தகுந்தார் போன்று, மெழுகு வர்த்தி தயாரித்து விற்பனை செய்கிறார். மகளிர் தினத்துக்கு, பெண்கள் உருவத்தில் உள்ள மெழுகு வர்த்தி, திருமண ஆண்டு விழாவுக்கு தம்பி மெழுகு வர்த்திகள், தாய், சேய் மெழுகு வர்த்திகள், பழ விதைகளால் தயாரிக்கப்பட்ட மெழுகு வர்த்திகள், அம்பேத்கர், ராஜ்குமார், புனித் ராஜ்குமார், புத்தர் உட்பட, பல்வேறு உருவங்களில் மெழுகு வர்த்திகள் தயாரிக்கிறார்.

தேங்காய் ஓடு மெழுகு வர்த்திகள், வாசனை திரவியங்களால் ஆன மெழுகுவர்த்திகள் மக்களை சுண்டி இழுக்கின்றன. இவைகள் கடைகளில் விற்பதில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமாக விற்கிறார். முகநுால், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மெழகு வர்த்திகளின் போட்டோக்களை அப்லோட் செய்கிறார். விருப்பம் உள்ளவர்கள், தொலைபேசியில் ஆர்டர் செய்து, பெறுகின்றனர்.

இவரிடம் 12 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான விலையில், மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. தற்போது பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். இவரிடம் 13 பெண்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மாதம் 8,500 முதல் 18,000 ரூபாய் வரை, ஊதியம் பெறுகின்றனர். இப்பெண்களுக்கு மெழுகு வர்த்தி தயாரிக்க ஸ்ரீவித்யா பயிற்சி அளிக்கிறார். சில பெண்கள் இவரிடம் பயிற்சி பெற்று கொண்டு, சொந்தமாக தொழில் செய்கின்றனர்.


பலர் தாங்கள் மட்டும் வளர்ந்தால் போதும் என, சுயநலத்துடன் சிந்திப்பர். ஆனால் ஸ்ரீவித்யா, தான் வளர்வதுடன் மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறார். இவரால் பல பெண்கள், கைத்தொழில் துவங்கி பணம் சம்பாதிக்கின்றனர். இவர் மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக வாழ்கிறார்.

- நமது நிருபர் -

Advertisement