சிறுமுகையில் கைத்தறி பூங்கா அமைக்க நெசவாளர்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்; சிறுமுகை சுற்றுப் பகுதிகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இருப்பதால், தமிழக அரசு சிறுமுகையில் 'கைத்தறி நெசவு பூங்கா' அமைக்க வேண்டும் என, நெசவாளர்கள் கூறினர்.

சிறுமுகை, மூலத்துறை, பகத்தூர், வெள்ளிக்குப்பம்பாளையம், திம்மராயம்பாளையம், ஆலாங்கொம்பு, மூக்கனுார், தொட்டம்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். ஒரு கைத்தறிக்கு இரண்டு பேர் வீதம், நேரடியாக, 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது அல்லாமல் நெசவு சார்ந்த தொழிலில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் சாப்ட் சில்க் (மென்பட்டு), கோரா காட்டன், காட்டன் ஆகிய மூன்று சேலைகள் அதிகளவில் நெசவு செய்யப்படுகிறது.

இப்பகுதியில், 15 கைத்தறி கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் செயல்படுகின்றன.

இதுகுறித்து சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:

சிறுமுகையை சுற்றி, 20 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் ஏராளமான நெசவாளர்கள், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு எவ்வித பயிற்சி கூடமும் இல்லை. எனவே சிறுமுகைப் பகுதியில், கைத்தறி நெசவு பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்களும், சிறுமுகையில் கைத்தறி நெசவு பூங்கா அமைப்பதாக, தேர்தல் வாக்குறுதியில் கூறினர். ஆனால் இதுவரை கைத்தறி நெசவு பூங்கா அமைக்க, நடவடிக்கை ஏதும் இல்லை. கைத்தறி நெசவு பூங்கா அமைத்தால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நலிவடைந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில், மேன்மை அடையும்.

மேலும், பட்டு, ஜரிகை, நுால் ஆகியவற்றை, அரசு கொள்முதல் செய்து, தங்கு தடை இல்லாமல் நெசவாளர்களுக்கு வழங்கும். பயிற்சி கூடமும் அமைத்து, அதன் வாயிலாக பலருக்கு நெசவுத்தொழில் கற்றுக் கொடுக்க, இது ஒரு பயிற்சி பட்டறையாகவும் இருக்கும். எனவே தமிழக அரசு, கைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறுமுகையில் ஹேண்ட்லூம் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement