வரத்து அதிகரிப்பால் முல்லைப்பூ கிலோ ரூ.100

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள வெம்பாக்கம், பூஞ்சேரி, சேந்தமங்கலம், கண்டிகை, மேலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முல்லைப்பூ காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் முகூர்த்த நாட்களில், காஞ்சிபுரத்தில் கிலோ முல்லைப்பூ 300 - 500 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், நேற்று, திடீரென விலை சரிந்து, கிலோ முல்லைப்பூ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து காஞ்சிபுரம், பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த பூ மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரி ஏ.கே.ஜி.பிரபாகரன் கூறியதாவது:
வைகாசி மாதம் துவங்க வேண்டிய முல்லைப்பூ சீசன், கடந்த வாரம் துவங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால், சில நாட்களாக காஞ்சிபுரத்திற்கு முல்லைப்பூவின் வரத்து அதிகரித்துஉள்ளது.
இருப்பினும், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முகூர்த்த நாட்கள் எதுவும் இல்லாததாலும் முல்லைப்பூவின் தேவை குறைந்துள்ளது. மேலும், காஞ்சிபுரத்தில் கத்திரி வெயிலுக்கு பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து விட்டனர்.
இதனால், முல்லைப்பூ விலை சரிந்துள்ளது. கடந்த வாரம், கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்த முல்லைப்பூவை, தற்போது, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.