சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீட்டில் இந்தாண்டு புதிய நடைமுறை

கோவை: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மறுமதிப்பீடு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை இருந்த நடைமுறையில், மாணவர்கள் முதலில் மதிப்பெண்களை சரிபார்க்க வேண்டியிருந்தது. அதன்பின், விடைத்தாள் நகலை பெற்று, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய நடைமுறைப்படி, மாணவர்கள் முதலில், மதிப்பீடு செய்யப்பட்ட தங்களின் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதன்பின், விருப்பப்படி மதிப்பெண்கள் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யலாம்.

கடந்த, 2024 -- 25ம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கல்வியாளர் சோமசுந்தரம் கூறியதாவது:

இந்த புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது. மாணவர்கள் தங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் நகல்களை பார்த்து, அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் மதிப்பீட்டாளரின் குறிப்புகள் குறித்து தெளிவுபடுத்த இது உதவும்.

ஆசிரியர்களிடம் விடைத்தாள் நகலை காண்பித்து, அவர்களின் அறிவுரையில், ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைத் தெரிந்து, அடுத்த நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement