கட்டுமான பணிக்கான கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: புதிய கட்டடம் கட்டுவோர் மற்றும் பழைய கட்டடங்களை இடிப்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. குறித்த காலத்தில் விதிமீறல்களை தடுக்காவிட்டால் கட்டுமானப் பணி நிறுத்தப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு போன்ற காரணத்தால், தினமும் 800 டன் கட்டட கழிவு வெளியேறுகிறது.
பணியிடங்களில் ஏற்படும் விதிமீறலால், பொதுமக்களுக்கு இடையூறு, சுற்றுச்சூழல் மாசு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில், கட்டுமான பணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள், வரும் 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளும், 18 தலைப்புகளின் கீழ் வெளியிடப்பட்டு உள்ளன. விதிமீறல்களை குறித்த நாட்களில் சரி செய்யாவிட்டால், கட்டுமான பணி நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்
ஒரு ஏக்கருக்குள் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, 6 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் என்றால், 10 மீட்டர் உயரத்தில் உலோகத்தால் தடுப்பு அமைக்க வேண்டும்
கட்டட இடிபாடுகளால் துாசி பரவுவதை தடுக்க, அடர்த்தியான துணி, தார்பாய், இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூட வேண்டும். துாசி பரவாமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்
கட்டுமான இடிபாடுகளை மாநகராட்சி வழிகாட்டுதல்படி, அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட வேண்டும். நடைபாதை, சாலையோரம் கொட்டக்கூடாது
இடிபாடுகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, தார்பாயினால் மூடி கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று அவசியம்
கட்டுமான பணி இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கட்டடத்தின் உயரம் 18.5 மீட்டருக்கு மேல் இருந்தால், சென்சார் அடிப்படையில் காற்று மாசை கண்டறியும் கருவி பயன்படுத்த வேண்டும்
இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விதிமீறல்களை சரி செய்ய, 15 நாட்கள் அவகாசம் தரப்படும். சரி செய்யாவிட்டால், பரப்பளவுக்கு ஏற்ப, 1,000 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்குபிறகும் சரி செய்யாவிட்டால், ஏழு நாட்கள் அவகாசம் வழங்கி, பணியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும். கட்டுமான நிறுவனங்கள், இடிபாடுகளில் ஈடுபடுவோர் ஒத்துழைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 1913 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.- மாநகராட்சி அதிகாரிகள்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை