தியேட்டர் கூரை இடிந்து விழுந்து விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி., சினிமாஸ் என்ற தியேட்டர் உள்ளது. இங்குள்ள ஐந்து திரைகளில் அண்மையில் வெளியான படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், திரளான ரசிகர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 3:00 மணி அளவில், சென்னை மற்றும் புறநகரில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த நிலையில், திடீரென தியேட்டரின் நுழைவாயில் முகப்பு மற்றும் கூரை சேதமாகி திடீரென இடிந்து விழுந்தது. திரைப்படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கள், அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியேறினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிரேன் உதவியுடன் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகினறன.

Advertisement