நவீன நிழற்குடைகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு பஸ் பயணியர் அதிருப்தி

சென்னை: சென்னை மாநகராட்சியில், 387 கி.மீ., துாரத்திற்கு 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 31 பணிமனைகளில் இருந்து, 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணியர் வசதிக்காக, 1,363 நவீன பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்க, 12 லட்சம் முதல் நடைமேடை, சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளுடன், 20 லட்சம் ரூபாய் வரை கட்டப்படுவதாக தெரிகிறது.

அதிக செலவில் கட்டப்படும் இந்நிழற்குடைகள், விளம்பரம் செய்வதையே பிரதானமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளியாக இருப்பதால், சாதாரண சாரல் மழைக்கு கூட ஒதுங்க முடியாத அளவில், படுமோசமாக உள்ளது. பெருமழை பெய்தால், பயணியர் நனைந்தபடி, பேருந்திற்கு காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் வைத்து, நவீன நிழற்குடைகளை கைவிட்டு, பழையபடி, கான்கிரீட் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நவீன நிழற்குடைகளை காட்டிலும், கான்கிரீட் நிழற்குடைகள் அமைப்பதற்கான செலவு குறைவு. மேலும், ஆயுட்காலமும் அதிகம் இருக்கும் என்பதால், மக்கள் வரிப்பணம் வீணாகாது என, பயணியர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement