தேடப்பட்ட கேரள வாலிபர் சென்னை ஏர்போர்ட்டில் கைது

சென்னை: கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் சஜீவன் அதுல், 31. இவர் மீது, நம்பிக்கை துரோகம், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில், ஆறு மாதங்களுக்கு முன், கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரிடம் சிக்காமல், சஜீவன் அதுல் வெளிநாட்டிற்கு தப்பினார். இதனால், கேரள போலீசார் தேடப்படும் குற்றவாளியாக இவரை அறிவித்து, விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' பயணியர் விமானம், சென்னை விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

அதிலிருந்து இறங்கிய பயணியர் குறித்த விபரங்களை கணினி வாயிலாக, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சஜீவன் அதுல், கேரள போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதுதெரியவந்தது. அவரை தனிமைப்படுத்தி விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து, கேரள மாநிலம், திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement