உடுமலை சுற்றுலா பகுதிகளை இணைத்து கோடை விழா நடத்தணும்! ஆலோசனை செய்ததால் எகிறும் எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலையில், திருமூர்த்திமலை, அமராவதி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், இந்தாண்டு கோடை விழா நடத்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை சுற்றுலா தலங்களாக உள்ளன. திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி, நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம், அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை உள்ளிட்டவை சுற்றுலா பயணியரை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

ஆனால், இந்த சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம் வெளியில் தெரியாததால், ஆண்டுதோறும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சிமலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலா தலங்களில் வருவாய் ஈட்டி, அதன் வாயிலாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், விடுமுறை காலத்தில், கோடை விழா நடத்த வேண்டும் என, உடுமலை பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்விழாவையொட்டி, சுற்றுலாத்துறை சார்பில் அனைத்து பகுதிகளிலும் விளம்பரப்படுத்தி, கண்காட்சி மற்றும் கேளிக்கை விளையாட்டு சாதனங்களை அமைத்தால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்வர். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சுற்றுலா தலங்களில் வசதிகளையும் மேம்படுத்த முடியும்.

திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகத்தால், திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில், அரசுத்துறைகள் சார்பில், கண்காட்சி, அரங்குகள் அமைக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் மற்றும் இதர விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விழாவில், சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் அதிகளவில் பங்கேற்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்விழாவும் நடத்தப்படுவதில்லை. இதனால், ஆண்டுதோறும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்தாண்டு கோடை விடுமுறை காலத்தில், திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணையில் கோடை விழா நடத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கேற்ப, கடந்த ஜன., மாதத்தில், சுற்றுலாத்துறை சார்பில், திருப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணையில், கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எவ்வித அறிவிப்பும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் வெளியாகவில்லை. விரைவில் கோடை விழாவுக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உடுமலை பகுதி மக்கள் உள்ளனர்.

கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், திருமூர்த்திமலை, அமராவதியில் எவ்வித மேம்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement