துருக்கி , சீனாவுடன் கையேந்தும் பாக்.,: போர் 'பசி'யை தீர்க்க ஆயுதங்கள் இல்லை

பாகிஸ்தான் ராணுவம் போருக்கு குதித்தாலும், கையிருப்பில் ஆயுதங்கள் இல்லை; பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்தும் இல்லை. இதனால், சீனா, துருக்கி போன்ற நாடுகளிடம், ஆயுத உதவி மற்றும் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.
பாகிஸ்தானுக்கு விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு, சில நாடுகளே ஆதரவாக உள்ளன. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில், பாகிஸ்தானை சீனா ஆதரிக்கிறது. இது தவிர துருக்கி, அசர்பைஜான் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானின் அடாவடித்தனத்துக்கு ஆதரவு அளிக்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டப்பட்டாலும், சித்தாந்த ரீதியாக ஹமாஸ் மற்றும், 'தி ரெஸிஸ்டென்ஸ் பிரன்ட்' என, பல்வேறு வடிவங்களில் உயிர் பெற்றுள்ளன. இவை தங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும், என, பாக்., ராணுவம் தைரியமாக இருக்கிறது.
இவர்கள், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், இலங்கை, இஸ்ரேல் என பல நாடுகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதால், அந்நாட்டுக்கு ஆதரவு தர அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாடும் ஆதரவு தராது.
ஒவ்வொரு நாடும் இத்தகைய பயங்கரவாதத்தால், ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா, துருக்கி போன்ற நாடுகள் மட்டுமே முன் வர வாய்ப்புள்ளது.
வர்த்தக உறவு
இந்தியாவுடன் துாதரக ரீதியிலான உறவுகள் திருப்திகரமாக இல்லாவிட்டாலும், வர்த்தக உறவுகள் கணிசமாக இருப்பதால், சீனா யோசிப்பதாகவே தெரிகிறது. பாகிஸ்தானை விட இந்தியாவுடன் வர்த்தக திட்டங்கள் சீனாவுக்கு அதிகம் உள்ளன. மேலும், பொருளாதார நிலையில் மிகவும் மோசமாகி உள்ள பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கினால், தங்களுக்கு எந்த லாபமும் வராது. செலவழிக்கும் நிதியை ஒருபோதும் திருப்பிப் பெற முடியாது என சீனா தயங்குகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் ஆயுத உதவி, பொருளாதார உதவி செய்தார். அதற்கு பதிலாக, டிரம்ப் அதிபரான பின், உக்ரைன் அதிபரை மிரட்டி பணிய வைத்து, கனிம வளங்களை அமெரிக்கா, ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்தது.
பாகிஸ்தானில் அத்தகைய வளங்கள் எதுவும் இல்லை. இதனால், பாகிஸ்தானுக்கு உதவி செய்து சீனாவுக்கு என்ன லாபம்?
ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதால், ரஷ்யாவின் நட்புறவை முறிக்கவும் சீனா விரும்பவில்லை. எனினும், மறைமுகமாக, பாகிஸ்தானுக்கு சிறிதளவு ஆயுத உதவிகளை சீனா வழங்க வாய்ப்புள்ளது.
'தற்போது பதற்றத்தை தணித்து அமைதியாக இருப்பதே நல்லது. பிரச்னையை வளர விட வேண்டாம்' என, பாகிஸ்தானுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அறிவுரை வழங்கியுள்ளார்.
சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவன் சையத் சலாஹுதீன், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் என பலருக்கும் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதில் சில அமைப்புகள் நாசகார ஆயுதங்களை கைவசம் வைத்துள்ளன. பஹல்காமில் சுற்றுலா பயணியரை சுட்டுக்கொன்ற ஹஷீம் மூஸா என்ற பயங்கரவாதி, 'எம்.4 கார்பைன்' ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளான். இவற்றை, நன்கு பயிற்சி பெற்றவர்களே பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ரக துப்பாக்கி, பயங்கரவாதிகளுக்கு எப்படி கிடைத்தது என சந்தேகம் எழுந்தது. ராணுவ ரீதியாக ஆயுதம் கொள்முதல் செய்திருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இவை ஆப்கனில், 'நேட்டோ' படையினரிடம் இருந்து, தலிபான்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இது பாக்., பயங்கரவாதிகளுக்கு கிடைத்துள்ளதும், மர்மமாகவே உள்ளது.

மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்