தோட்ட வீடுகளில் போலீசார் ஆய்வு

அன்னுார்; சந்தேக நபர்கள் குறித்து, தகவல் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், நான்கு நாட்களுக்கு முன், தோட்டத்தில் தனியாக இருந்த தம்பதி கொல்லப்பட்டனர், இதையடுத்து தனியாக தோட்டங்களில் உள்ள முதியோர் குறித்து ஆய்வு செய்து கண்காணிப்பு தீவிரப்படுத்த கோவை ரூரல் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் எஸ்.ஐ.,கள், போலீசார் என 20 பேர் பல்வேறு கிராமங்களில் தனியாக தோட்டங்களில் வசிக்கும் முதியோர் வீடுகளுக்கு சென்றனர்.

முதியோர்களிடம், 'சந்தேக நபர்கள் குறித்து அன்னுார் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அக்கம் பக்கத்தில் இருப்பவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தோட்டத்திற்கு செல்லும் பாதையில் கேமரா பொருத்த வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் நாய் வளர்க்க வேண்டும்,' என அறிவுறுத்தினர். இதையடுத்து, சத்தி ரோட்டில், பட்டறை பஸ் ஸ்டாப்பில், வாகன தணிக்கை நடந்தது. விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், தோட்டங்களில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அன்னுார் ஒன்றியத்தில், தோட்ட வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெறும்,' என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement