விபத்தை வரவேற்கும் சீரமைக்கப்படாத சாலை

திருப்பூர்; திருப்பூர் - மங்கலம் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு, மாநகராட்சி எல்லையில் மிகுந்த சேதமாகியுள்ளது. பாதாளசாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணியால், அடிக்கடி ரோடு தோண்டப்பட்டது. பணி நிறைவடையாமல் இருப்பதால், 'பேட்ச் ஒர்க்' மட்டும் நடக்கிறது. தரமான ரோடு அமைக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதியில் மட்டும், ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. பெரியாண்டிபாளையம் வரை ரோட்டை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆண்டிபாளையம் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில், ரோட்டில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சரிசெய்துவிட்டு, மையத்தடுப்பு வைக்கப்பட்டது. குறிப்பாக, ரோட்டின் வடபுறம் செல்லும் பாதையின் மையப்பகுதியில், தடுப்பு வைக்கப்பட்டது.

இதனால், குளம் அருகே உள்ள வளைவு பகுதியில், வாகன போக்குவரத்து சவாலாக மாறிவிட்டது. தடுப்பு இருப்பதால், வலதுபுறமாக செல்லும் கனரக வாகனங்கள், மேற்கு நோக்கி வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. அடிக்கடி, 'டூ வீலர்'கள் விபத்துகளை சந்திக்கின்றன.

அப்பகுதியில், ரோட்டின் தென்புறம், 24 மணி நேரமும் தண்ணீர் வெளியேறும் 'ஏர் வால்வ்' அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில், வாகனங்களை ரோட்டில் நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.

இதனால், ஆண்டிபாளையம் குளத்துக்கடை பஸ் ஸ்டாப் அருகே வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது; விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

24 மணி நேரமும்

குடிநீர் விரயம்மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்பை அகற்றி, ரோட்டில், 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும். மேலும், 24 மணி நேரமும் 'ஏர் வால்வில்' வெளியேறும் தண்ணீரை, குழாய் மூலம், ரோட்டின் வடபுறம் குளத்துக்குள் செல்வது போல் மாற்றிவிட வேண்டும். இதனால், வீணாக விரயமாகும் தண்ணீர் குளத்துக்குள் சென்று சேரும். வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதும் தவிர்க்கப்படும்.- பொதுமக்கள்.

Advertisement