மதுரையில் 15 மையங்களில் நடந்த நீட் தேர்வு மாணவர்களை சோதித்த இயற்பியல், வேதியியல்

மதுரை : மதுரையில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை 15 மையங்களில் மாணவர்கள் எழுதினர். 97 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) சார்பில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு கடந்தாண்டு வரை மாவட்டம் வாரியாக தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தாண்டு முதன்முறையாக கேந்திரிய வித்யாலயா (கே.வி.,) பள்ளி முதல்வர்கள் தேர்வை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் விண்ணப்பித்த 8222 மாணவர்களில் 97 சதவீதம் பேர் பங்கேற்றனர். கடுமையான சோதனைகளுக்கு பின்பே மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.
சாய்ஸ் வினா ரத்து
கொரோனாவுக்கு பின் நடந்த தேர்வுகளில் 'பிரிவு ஆ' பகுதியில் 'சாய்ஸ்' வினாக்கள் இடம் பெற்றன. இதனால் ஒன்றுக்கு பதில் தெரியாவிட்டாலும் அடுத்த வினா கை கொடுத்தது. இந்தாண்டு 'சாய்ஸ்' வினாக்கள் இல்லாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் சற்றுத் திணறினர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் கூறியதாவது:
எதிர்பார்த்த வினாக்கள்
ஸ்வேதா, மாணவி
உயிரியல் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு படித்தேன். எதிர்பார்த்த வினாக்கள் எளிதாகவே இருந்தது. ஆனால் வேதியியல், இயற்பியல் பகுதி வினாக்கள் கடினமாக இருந்தன. 'நெகட்டிவ்' மதிப்பெண் அச்சத்தில் நன்றாக தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடை எழுதினேன். 720க்கு 350க்கும் மேல் மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இயற்பியல் கடினம்
ஆடன் சைனி, மாணவி
உயிரியில் பகுதியில் விலங்கியல், தாவரவியல் பகுதியில் இடம் பெற்ற வினாக்கள் எளிதாக இருந்தது. இப்பகுதியில் மட்டும் 75 சதவீதம் மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன். வேதியியல் பிரிவில் சில தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடை எழுதினேன். இயற்பியல் பகுதி கடினமாக இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.
சவாலான பெரிய வினாக்கள்
ஹரிணி, மாணவி
இயற்பியல் பகுதி வினாக்கள் பெரிதாக இருந்தன. அதை படித்து புரிந்து விடையளிப்பது சவாலாக இருந்தது. தெரிந்த வினாக்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி விடையளிப்பதில் சிரமம் இருந்தது. இதனால் அதை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு சார்பில் நடத்திய கோச்சிங்கில் பங்கேற்றது பேருதவியாக இருந்தது. உயிரியியல் பகுதியில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
யோசித்து எழுதும்வினாக்கள் அதிகம்
ஜெய்வர்ஷிணி, மாணவி
இயற்பியல், வேதியியல் பகுதியில் பல வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக இயற்பியலில் நீளமானதாகவும், பார்முலா பயன்படுத்தி விடையளிக்கும் வகையிலும் பல வினாக்கள் கேட்கப்பட்டன. உயிரியல் பகுதியிலும் சில வினாக்கள் சவாலாக இருந்தது. சில தெரிந்த வினாக்கள் வேண்டுமென்றே குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கடினமாகத்தான் தேர்வு அமைந்தது.
நீட் தேர்வு மதுரையில் நரிமேடு கே.வி., பள்ளி முதல்வர் மனோஜ்குமார் பாலிவால் தலைமையில் தேர்வு நடந்தது. பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 15 மையங்களிலும் மாணவர்கள் பங்கேற்பு, ஆப்சென்ட் விவரங்களை முடிவு செய்வதில், அறிவிப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. மாவட்ட அளவில் நீட் தேர்வு குறித்து விபரங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் எவ்வித ஏற்பாடும் இல்லை. கடந்தாண்டு வரை சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் தலைமையில் நடத்தி தேர்வில் விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை