ரோட்டோர குப்பையை அகற்ற வேண்டும்

அழகர்கோவில்: மதுரை சர்வேயர் காலனி, அல்அமீன் நகர், கணபதி நகர் முதல் கடச்சனேந்தல், காதக்கிணறு வரை ரோட்டோர கால்வாய்களில் குப்பை கழிவுகள் உள்ளன.

பல மாதமாக இப்பகுதியில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடாக உள்ளது. மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் வண்டிகளுடன் சென்று குப்பையை சேகரிக்கின்றனர். ஆனாலும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் பெருமளவில் இருப்பதால் அவற்றின் கழிவுகள் இங்கே கொட்டப்படுகின்றன. சிலர் குப்பையை எரித்து விடுகின்றனர். மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குப்பை கிளறுகின்றன. திடீரென அவை கால்வாய்க்குள் விழும் அபாயமும் உள்ளது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் மலையில் இருந்து மே 10ல் மதுரைக்கு புறப்பாடாகி வருகிறார். ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புற்களை அகற்றி, தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசப்படுகிறது. அழகர் வர சில தினங்களே உள்ளதால் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் குப்பையை அகற்ற வேண்டும். மீண்டும் கொட்டாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement