மாவட்ட நுாலகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் அதிருப்தி

கள்ளக்குறிச்சி; மாவட்ட நுாலகம் கட்டும் பணிகள் கிடப்பில் இருப்பதால் வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்கத்தை தொடர்ந்து அங்குள்ள நுாலகம் மாவட்ட நுாலகமாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்யும் பணிகள் துவங்கின.

ஆனால் அதற்கான இடம் நகரப்பகுதியில் எங்கும் கிடைக்காததால், மாவட்ட நுாலகம் துவங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கால்நடை மருத்துவ வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கான இடம் தேர்வு செய்வதற்கான முகாந்தர பணிகள் துவங்கின. ஆனால் அந்த பணி துவக்க நிலையில் கைவிடப்பட்டது. மக்கள் தொடர்ந்து நுாலக தர உயர்வு குறித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி பழைய தாசில்தார் அலுவலக இடம், மாவட்ட நுாலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அறிவிப்புடன் நின்று போன நுாலக பணிகள் எவ்வித முன்னெடுப்பும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்போன்று எவ்வித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்ட தலைநகரில் மாவட்ட நுாலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் இதுவரை புரியவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement