வாணாபுரத்தில் ஆர்ப்பாட்டம்

ரிஷிவந்தியம்; வாணாபுரத்தில் கிறிஸ்துவ வன்னியர் முன்னேற்ற நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில், முதல்கட்டமாக நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெய் ஜெரால்டு தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் பிரான்சிஸ், பொருளாளர் அந்தோணிராஜ், கூட்டமைப்பு தலைவர் தேவராயப்பன், மாவட்ட செயல் தலைவர் லுார்துசாமி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி, கடலுார் உயர் மறை மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கமிஷன் செயலாளர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இதில், வன்னிய கிறிஸ்துவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.அரசியலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, நிர்வாகிகள் ஊர்வலமாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அலுவலகம் வரை நடந்து சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகனிடம் கோரிக்கை மனுவை வழங்கி, கலைந்து சென்றனர்.

Advertisement