போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்

சென்னை: தடையை மீறி தொழிற்சாலை நுழைவாயிலில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவி உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் கைது செய்யப்பட்டனர்.


அரக்கோணம் அருகே எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தற்காலிக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சாலை நுழைவாயிலில் அரக்கோணம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவி முன்னாள் எம்.பி அரி உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி நிர்வாகிகளை தி.மு.க., அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் எங்கள் கட்சியினர் பயப்பட மாட்டார்கள். எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement