மனித உரிமைகள் டி.எஸ்.பி., அலுவலகத்தை எஸ்.பி., அலுவலகத்துக்குள் இடமாற்ற எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகரில் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்தை மாவட்ட எஸ்.பி., தலைமை அலுவலகத்துக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ்சில் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டி.எஸ்.பி., நிலையில் உள்ள அதிகாரியை தலைமையாகக் கொண்டு மாவட்ட போலீஸ் துறையின் தலைமை அலுவலகத்தில் இந்த சிறப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மக்கள் வன்கொடுமையால் பாதிக்கப்படும்போது, அவர்களின் மறுவாழ்விற்கு இழப்பீட்டு நிவாரணங்களுக்கான பரிந்துரைகளை கலெக்டர், ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்பி வைப்பது, எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைப்பது இப்பிரிவின் முக்கியமான பணி.

ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் இந்த பிரிவு, எஸ்.பி., அலுவலகத்தில் இயங்காமல், 2 கி.மீ., தொலைவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மிகவும் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் வன்கொடுமையால் பாதிக்கப்படுவோர் தங்களின் மறுவாழ்வுக்கான இழப்பீட்டு நிவாரணங்கள் தொடர்பான நிலை குறித்த தகவல்களை பெற இயலாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் நிர்வாகம் தரப்பில் கூறும் போது, மாவட்ட போலீஸ்துறையில் செயல்படும் அனைத்து சிறப்புப் பிரிவு அலுவலகங்களும் மாவட்ட போலீஸ்துறை தலைமை அலுவலகத்தில் செயல்படும் வகையில், புதிய மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கான திட்ட வரைவு தமிழக போலீஸ் துறை தலைமை இயக்குனர் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, புதிய கட்டடத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்ற பின், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., அலுவலகம், மாவட்ட போலீஸ்துறை தலைமை அலுவலகத்திலேயே செயல்படும், என்று தெரிவித்தனர்.

Advertisement