எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு

8

புதுடில்லி; சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, விளம்பர நோக்கத்துக்காக தொடரப்பட்டது என்று கூறி சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.



பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கூர்மைப்படுத்தி உள்ளது. எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.


இந் நிலையில் பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டி, மலை வாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யாகாந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது;


கடந்த முறை நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தினோம். இதுபோல் செய்ய முயற்சிக்க வேண்டாம். உங்களின் நோக்கம் தான் என்ன? இதுபோல் பொதுநல வழக்கை தாக்கல் செய்யுமாறு உங்களிடம் சொல்வது யார்? உங்களுக்கு பொறுப்பு இல்லையா? என்று சரமாரியாக கேட்டனர்.


தொடர்ந்த பேசிய நீதிபதிகள், பொதுசேவை செய்யும் நோக்கம் இல்லாமல், விளம்பரம் பெற வேண்டும் என்பதை மட்டுமே கொண்டு பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளீர். வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.


இதே மனுதாரர், பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நீதித்துறை ஆணையம் அமைக்க கோரி மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement