போலீஸ் அறிக்கை உண்மைக்கு புறம்பானது; மறுக்கிறார் மதுரை ஆதினம்!

43


சென்னை: ''உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது'' என மதுரை ஆதினம் மறுப்பு தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் மதுரை ஆதினம் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மதுரை ஆதீனம் எவ்வித காயமும் இன்றி தப்பினார். இது தொடர்பாக பேட்டி அளித்த மதுரை ஆதீனம், 'கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; என்னை கொல்ல நடந்த சதி' என குறிப்பிட்டார்.

'மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய்,'' என, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.




இந்நிலையில் இன்று (மே 05) மதுரை ஆதினம் வெளியிட்ட அறிக்கை: உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது.


எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், தடுப்புகளை தாண்டி வந்து அவர்கள் மோதியது பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனம் என்று குற்றம் சாட்டியது பற்றியும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது.


முன்னுக்கு பின் முரண்பாக அமைந்துள்ள போலீசாரின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக கருதுகிறோம். அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால் போலீசார், எந்தவித புகாரும் மதுரை ஆதினம் சார்பாக பெறப்படவில்லை என்று கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.



15க்கு மேற்பட்ட முறை போலீசாரை தொடர்பு கொண்டு பேசி இது பற்றி விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதினம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாக்கியுள்ளது வேதனை அளிக்கிறது.

நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் டூ சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுகி வாகனம் மோதியது. சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர்.



போலீசாரை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் போலீசார் தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement