ஈரோடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மே 20 முதல் தொடர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு

9

ஈரோடு: ஈரோடு தம்பதி கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மே 20 முதல் தமது தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம் இருவரும் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந் நிலையில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது;


எங்கேயும் பார்த்திடாத, கேட்காத, கோழைத்தனமான, மூர்க்கத்தனமான மிருகங்களை விட கொடூரமான சில மனிதர்களால் இந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. காவல்துறை மீது கோபம் உள்ளது. ஆனால் காவல்துறையை எப்போதும் விட்டுக் கொடுப்பவர்கள் நாம் அல்ல.


ஆனால் இன்றைக்கு காவல்துறை தம்முடைய வேலையை சரியாக செய்யவில்லை என்ற கோபம் வந்துள்ளது. காவல்துறையினர் எங்கேயோ கோட்டை விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.


2022ல் பாலியல் வன்கொடுமைகள் 1319, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் 4949, 3 ஆண்டுகளில் போக்சோ குற்றங்கள் 16518 நடந்துள்ளது. எனவே உறுதியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.சட்டம் ஒழுங்கு முதல்வர் ஸ்டாலின் கையை விட்டுச் சென்றுவிட்டது.கட்டுப்படுத்தக்கூடிய திறன் இந்த ஆட்சிக்கு இல்லை.


எப்போது தேர்தல் வரும் என்று நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறோம். 2026 ஏப்ரலில் நடத்த வேண்டிய தேர்தலை நாளைக்கே நடத்தி விடலாமே? நல்ல ஒரு திறமை வாய்ந்த, இதுபோன்ற விஷயங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய முதல்வர் நமக்கு வேண்டும்.


இன்னும் 2 வாரத்தில் நீங்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பவில்லை என்றால் நாங்கள் இங்கே ஆட்சியில் இருந்தால் நீதிமன்றத்துக்கு எல்லாம் அனுப்ப மாட்டோம். துப்பாக்கி எல்லாம் எதுக்கு இருக்கிறது, குண்டெல்லாம் எதற்கு இருக்கிறது.


குறைந்த பட்சம் பயத்தை ஏற்படுத்தவாவது இதை செய்யவில்லை என்றால் மே 20ம் தேதியில் இருந்து இதே சிவகிரியில் நாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் உட்கார போகிறோம். அதை கலைக்க வேண்டும் என்றால் முதல்வர் தான் இங்கு வரணும். 20ம் தேதி நடக்க உள்ள போராட்டத்தில் நான் அமர்ந்து அதை ஆரம்பித்து வைக்கிறேன்.


முதல்வருக்கு தினமும் பாராட்டு விழா நடத்துகிறார்கள், எதற்கு பாராட்டு விழா? தமிழகத்திலே கொலை குற்றங்கள் அதிகரித்திருப்பதால் பாராட்டு விழாவா? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது, அதற்கு பாராட்டு விழாவா? இல்லை, டாஸ்மாக் வருமானம் 50,000 கோடியை தாண்டி விட்டத, அதற்காக பாராட்டு விழாவா?


இந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவாக ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள், அதற்கான பாராட்டு விழாவா? லாலு பிரசாத்தின் மோசமான ஆட்சியில் கூட ஒரேநாளில் 2 அமைச்சர்கள் மாற்றப்படவில்லை.


கைதுக்கு பயந்து கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குகிறார்கள். பொன்முடி கொஞ்சம், நஞ்சம் பேச்சா பேசினார். 13 தி.மு.க., அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. நிர்வாகம் மொத்தமாக சீர்குலைந்து, தோற்றுவிட்டது.


முதல்வரை பொறுத்த வரை நாடு முக்கியம் என்று இருக்க வேண்டுமே தவிர, ஓட்டு வங்கி முக்கியம் என்று இருக்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் இதேபோன்று நடைபெற்ற 4 கொலை வழக்குகளையும் சி.பி.ஐ., வசம் ஒப்படையுங்கள்.


இன்றைக்கு காவல்துறையினர் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தினரிடம் வந்து சி.சி.டி.வி., கேமிரா போடுங்கள் என்று கூறுகின்றனர். அப்போது உங்களுக்கு என்ன இங்கே வேலை? காவல்துறையின் உடைய துறையின் தலைவராக இருப்பவர் முதல்வர்.


விவசாய தோட்டத்தில் சி.சி.டி.வி போட்டால் எப்படி பராமரிப்பார்கள், அவர்களுக்கு என்ன தெரியும்?


இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement