ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல்; இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் இதோ!

புதுடில்லி: இந்திய ராணுவம், ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் என்ற ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கென முப்படை தளபதிகளை சந்தித்த பிரதமர் மோடி, தாக்குதல் நேரம், இலக்கு ஆகியவற்றை நீங்களே முடிவு செய்யலாம் என்று முழு சுதந்திரம் அளித்தார்.இதனால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம், ரஷ்யாவில் இருந்து அவசர கொள்முதல் அனுமதியின் கீழ், இக்லா எஸ் என்ற தனிச்சிறப்பு வாய்ந்த ஏவுகணைகளை 260 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது.
சிறப்புகள் இது தான்!
இந்த ஏவுகணைகள், குறுகிய தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தவை. அதாவது, 6 கிலோமீட்டர் என்ற குறுகிய தொலைவுக்குள் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்தியாவுக்கு மிகவும் வசதியானவை.
இவை, அதிகபட்சம் 3.5 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியவை.
இவற்றை ஒரே ஒரு தனி நபர் தோளில் வைத்து இலக்கு மீது ஏவி விட முடியும்.
ஒரு ராணுவ வீரரே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சுமந்தும் சென்று விடலாம். விண்வெளியில் இருக்கும் இலக்கு நோக்கி எளிதில் ஏவி தாக்குதல் நடத்த முடியும்.
விண்வெளியில் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானம், டிரோன், ஹெலிகாப்டர் போன்றவற்றை குறி பார்த்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற 'இன்ப்ரா ரெட் ஹோமிங்' வசதி இதில் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏவுகணையை, ஒரு முறை இலக்கு மீது குறி வைத்து ஏவி விட்டால் போதும்; குறி வைக்கப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டர் அல்லது டிரோனின் இன்ஜின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்திய ராணுவத்திடம் ஏற்கனவே இக்லா ஏவுகணைகள் உள்ளன. அவற்றில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டது தான் இந்த இக்லா எஸ் என்ற மாடல் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.
பழைய இக்லா ஏவுகணைகளும், தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இந்திய நிறுவனம் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
போர் எந்த நேரத்திலும் துவங்கலாம் என்ற நிலையில் இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் எல்லையோர முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.





மேலும்
-
கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது
-
உயர் நீதிமன்ற வளாக 'டிஸ்பென்சரி'க்கு சிறப்பு டாக்டர்கள் பணியமர்த்த எதிர்ப்பு
-
தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படாததால் பயணியர் அவதி
-
திடீர் மழையால் மின்கம்பங்கள் சேதம் புறநகரில் பல மணி நேரம் மின் தடை
-
கூடூருக்கு 2 புது ரயில் பாதை தெற்கு ரயில்வே பரிந்துரை
-
திடீர் மழையால் பயிர்கள் பாதிப்பு நிவாரணம் கேட்கும் விவசாயிகள்