கூடூருக்கு 2 புது ரயில் பாதை தெற்கு ரயில்வே பரிந்துரை

சென்னை, சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் இருக்கின்றன.

செங்கல்பட்டு வரை மூன்று, அரக்கோணம் வரை நான்கு ரயில் பாதைகள் இருப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பெரிய அளவில் தாமதம் இன்றி இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில், இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன.

இதனால், விரைவு, சரக்கு ரயில்களுக்காக, மின்சார ரயில்கள் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இந்த தடத்தில் அடுத்தடுத்து செல்லும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள், தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, கூடுதலாக இரண்டு புது ரயில் பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - கும்மிடிப்பூண்டி - கூடூர் தடத்தில் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன. சென்னை சென்ட்ரல் - அத்திப்பட்டு வரையில் 22 கி.மீ., துாரத்துக்கு மொத்தம் நான்கு பாதைகள் இருக்கின்றன; இந்த பாதைகள் போதாது. விரைவு மற்றும் மின்சார ரயில்களின் தாமதம் குறைக்கவும், கூடுதல் ரயில்களை இயக்கவும் சென்னை - கூடூர் தடத்தில் 3 மற்றும் 4வது புதிய ரயில்பாதை தேவை ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ரயில்வே வாரியத்திடம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதைகள் அமையும்பட்சத்தில், டில்லி, ஆந்திரா, மேற்கு வங்கம் பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்கள், மின்சார, சரக்கு ரயில்கள் தாமதம் இன்றி இயக்கலாம். கூடுதல் ரயில்களும் இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement