தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படாததால் பயணியர் அவதி

சென்னை,
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வாயிலாக, முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் முடங்கிய இந்த சேவை, மீண்டும் படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்தது.

சென்னை ரயில்வே கோட்டத்தில், 63 இடங்களில், 128 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், தனியார் நபர்களை நியமித்து, தானியங்கி இயந்திரம் வாயிலாக டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சேவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து. தற்போது, போதிய ஆட்கள் நியமிக்காததால், டிக்கெட் இயந்திரங்கள் முழு அளவில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பூர், மாம்பலம், கூடுவாஞ்சேரி உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில், தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன.

பல்வேறு நேரங்களில் ஆட்கள் இல்லாமலும், சில நேரங்களில், பழுதாகி காட்சி பொருளாகவும் உள்ளன.

நேரடியாக ரயில் டிக்கெட் எடுப்போர், யு.டி.எஸ்., செயலி வாயிலாக முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்போரும், இந்த இயந்திரம் வாயிலாகவே காகித டிக்கெட் எடுக்கின்றனர்.

எனவே, பயணியரின் சிரமம் கருதி, தானியங்கி இயந்திரங்களை முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

***

Advertisement