உயர் நீதிமன்ற வளாக 'டிஸ்பென்சரி'க்கு சிறப்பு டாக்டர்கள் பணியமர்த்த எதிர்ப்பு

சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்திற்கு, அரசு சிறப்பு டாக்டர்களை பணியமர்த்த, டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக, 'டிஸ்பென்சரி' செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே இரண்டு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், தொடர்பு உடையோருக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்ற உள்கட்டமைப்பு குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், உயர் நீதிமன்ற டிஸ்பென்சரிக்கு, இதயவியல் மற்றும் பொது நல மருத்துவ துறை மருத்துவ நிபுணர்களை பணியமர்த்த, மக்கள் நல்வாழ்வு துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து இதயவியல், பொது மருத்துவத் துறை நிபுணர்கள் இருவர், உயர் நீதிமன்ற டிஸ்பென்சரிக்கு தினமும் பணிக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

தற்போது சுழற்சி முறையில், ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள், உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், திங்கள்தோறும் சென்னை மருத்துவ கல்லுாரி டாக்டர்கள்; செவ்வாய்தோறும் ஸ்டான்லி; புதன், வெள்ளி அன்று கீழ்ப்பாக்கம்; வியாழன் அன்று ஓமந்துாரார் அரசு பல்நோக்கு; வெள்ளியன்று கூடுதலாக கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு, அரசு டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது:

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டிஸ்பென்சரியில், மருத்துவமனைக்கான சிறப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை. இ.ஜி.சி., உபகரணத்தை இயக்க தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை.

உயர் சிறப்பு டாக்டர்ளே ஆனாலும், மருத்துவ கட்டமைப்பு இல்லாத இடத்தில், எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது.

எனவே, டாக்டர்களை அனுப்புவதை காட்டிலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏதேனும் மருத்துவ அவசர உதவி தேவைப்பட்டால், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற வழிவகை செய்யலாம்.

இதற்காக, ஆம்புலன்ஸ் வசதிகள், உயிர் காக்கும் மருத்துவ வசதிகள், மருந்துகள், உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

**

Advertisement