ஏரிக்குள் பறவைகளுக்கு இரண்டு தீவுகள் 30 கோடி லிட்டர் தண்ணீர் தேக்க முயற்சி

சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுாரில், நீர்வளத்துறைக்கு சொந்தமான தாங்கல் ஏரி, 24 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த ஆண்டு நவம்பரில், உடைந்திருந்த ஏரிக்கரை, மாநகராட்சி சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஏரியை மேம்படுத்த, கோவையை சேர்ந்த 'சிறுதுளி' என்ற தன்னார்வ அமைப்பு முன்வந்தது. இதற்கு, சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து, 2.50 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இந்த ஏரி, சாலை மட்டத்தில் இருந்து, 5 அடி ஆழத்தில், 10 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவில் இருந்தது. மேம்படுத்தும் பணியால், 12 அடி ஆழத்தில் துார்வாரப்பட்டது. மேல் பரப்பில் களிமண், 5 அடி ஆழத்திற்கு கீழ் ஓடைமண் இருந்தது. மொத்தம், 30 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையில், 1.50 லட்சம் கன மீட்டர் மண் அகற்றப்பட்டது.

இதுகுறித்து, 'சிறுதுளி' அமைப்பினர் கூறியதாவது:

மூன்று மாதத்தில் 50 சதவீத பணிகள் முடிந்தன. ஏரி 12 அடி உயரத்தில் தண்ணீர் சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. ஏரியின் மையப்பகுதியில், 50 மீட்டர் அகலத்தில், சதுர வடிவில், தீவு போல் இரண்டு பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளோம்.

இதற்காக, 40 அடி உயரத்தில் மண் நிரப்பப்பட்டது. இதில், புங்கை, நாவல், மூங்கில் மற்றும் பழங்கள் சார்ந்த, 15 வகையான, 650 மரக்கன்றுகள், 10 அடி இடைவெளியில் நட்டு அடர்வனம் ஆக்கப்படும்.

ஏரியை சுற்றி, 1.5 கி.மீ., நீளம், 10 அடி அகலத்தில் நடைபாதை, சிமென்ட் இருக்கைகள், சோலார் மின்விளக்குகள் அமைக்கப்படும்.

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், ராமன்தாங்கல் ஏரியில் சேர்ந்து, அங்கிருந்து ஒக்கியம்மடு வழியாக செல்லும்.

இந்த ஏரியில் தண்ணீர் தேங்குவதால், 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். ஜூலை மாதத்தில் அனைத்து பணிகளும் முடியும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement