24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

சென்னை : ''கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறந்திருக்க அளிக்கப்பட்ட அனுமதி, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மதுராந்தகத்தில் நேற்று நடந்த 42வது வணிகர் தின மாநாட்டில், அவர் பேசியதாவது:
மே 5ம் தேதியை, தமிழக அரசின் சார்பில், வணிகர் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது, வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை ஏற்று, மே 5ம் தேதி வணிகர் தினமாக அறிவிக்கப்படும். அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.
வணிகர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக இருப்போம். தி.மு.க.,வுக்கும், வணிகர்களுக்கும் இடையே எப்போதும் பாச உணர்வு உண்டு.
அதனால் தான் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, 88,496 வணிகர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்.
வணிகர் நல வாரிய நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை, 3 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
உணவுப் பொருட்கள் விற்பனை, சேமித்தல் தொழில்கள் தவிர, 500 சதுர அடிக்கும் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, சுய சான்றிதழ் முறையில் தொழில் உரிமம் வழங்கப்படும்.
சென்னை தவிர, மற்ற மாநகராட்சிகளில் கடைகள், வணிக வளாகங்களின் பிரச்னைகளை தீர்க்க, வழிகாட்டும் குழுக்கள் 2024ல் அமைக்கப்பட்டன. அதுபோல சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சிகளிலும் வழிகாட்டும் குழுக்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு ஒற்றைச் சாளர அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கு புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். இதில், 22 சேவைகள் இணைக்கப்படும். இதனால், வர்த்தகர்கள் தேவையான அனுமதியை எளிதாக பெறலாம்.
கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4ம் தேதியோடு முடிகிறது. இதை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்.
வணிகர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவை படிப்படியாக நிறைவேற்றப்படும். வணிகர்களில் நானும் ஒருவன். வணிகர்களுக்கு தி.மு.க., அரசு என்றும் துணை நிற்கும்.
அமைதியான மாநிலத்தில் தான் தொழிலும், வணிகமும் வளரும். தொழிலாளர்களும், வர்த்தகர்களும் நிம்மதியாக இருப்பர்.
அப்படிப்பட்ட அமைதி மிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தியுள்ளோம். தி.மு.க.,வுக்கு வணிகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
கடைகள், வணிக நிறுவனங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை மாற்றி, தமிழில் பெயர் வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயர் இருந்தாலும், அதை தமிழில் எழுதி வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
விதவிதமான பொய்களை சொல்லி ரூ.1.56 கோடி சுருட்டிய 6 பேர் கைது
-
'டயாலிசிஸ்' நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு
-
நட்டாவுக்கு குண்டு துளைக்காத வாகனம் தரப்பட்டது: டி.ஜி.பி.,
-
படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
-
தங்கம் சவரன் விலை ஒரே நாளில் ரூ.1,160 அதிகரிப்பு
-
நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல: மதுரை ஆதீனம்