அமெரிக்க பயணத்தில் அரசியல் பேச்சு அடியோடு தவிர்த்தார் அண்ணாமலை

சென்னை: பத்து நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்ட தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அங்கு பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவதை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
கடந்த 2021 ஜூலை 8 முதல், தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, ஏப்ரல் 12ம் தேதி மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 14 முதல், மூன்று நாட்கள் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றார்.
டெஸ்லா மோட்டார்ஸ்
பிரபல தொழிலதிபர் எலன் மஸ்கின் 'டெஸ்லா மோட்டார்ஸ்' நிறுவனத்திற்கு சென்ற அண்ணாமலை, அந்நிறுவன உயர் அதிகாரிகள், அங்கு பணியாற்றும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
அரிசோனா மாகாணம், பீனிக்ஸ் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டம், கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க கூட்டம் என, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்., வெளிநாட்டுப் பிரிவான ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்தவர்கள், பா.ஜ., ஆதரவாளர்கள் அழைப்பில் தான் அண்ணாமலை அமெரிக்கா சென்றார். பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் பல்வேறு கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்றுள்ளார்.
எந்த நிகழ்விலும் அரசியல் பேசுவதை, அவர் முற்றிலும் தவிர்த்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டது குறித்தும், அடுத்து என்ன பதவி கிடைக்கும் என்பது குறித்தும் சிலர் கேட்டபோதும், அதற்கு அண்ணாமலை பதிலளிக்கவில்லை.
கூட்டணி ஆர்வம்
ஸ்டான்போர்ட் பல்கலை, அரிசோனா மாகாண பல்கலையில், ஹிந்துத்துவா மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டங்களிலும் பங்கேற்றார். அதிலும், பாரதி தமிழ்ச்சங்க கூட்டத்திலும் நுாற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
அவர்கள் தமிழக அரசியல் குறித்து, குறிப்பாக அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி குறித்து, அண்ணாமலையின் கருத்தை அறிய ஆர்வம் காட்டியுள்ளனர். அதை தவிர்த்த அண்ணாமலை, மோடி ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பற்றி மட்டுமே பேசியுள்ளார்.
தனிப்பட்ட சந்திப்புகளிலும் கூட அரசியல் பேசுவதை அண்ணாமலை அடியோடு தவிர்த்ததாக, அவரது அமெரிக்க பயணத்தை ஏற்பாடு செய்த ஒருவர் தெரிவித்தார்.







மேலும்
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து
-
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்
-
ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்