இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: பவன் கல்யாண்

7

சென்னை : 'இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வரும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:



சமீபத்தில், ஐந்து வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நம் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள ராஜாங்க நல்லுறவுகளை அடிப்படையாக வைத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, இந்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கப்பூர்வமான பேச்சு வாயிலாகவும், பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாகவும், இரு நாடுகளும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில், துரிதமான தீர்வை காண வேண்டும்.

எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும், உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement