செங்கோட்டை மட்டும்தான் வேண்டுமா பதேபுர் சிக்ரி, தாஜ்மஹால் வேண்டாமா? முகலாயர் வாரிசின் மனு தள்ளுபடி

புதுடில்லி : தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து பறிக்கப்பட்டு, மத்திய அரசின் சட்டவிரோத கட்டுப்பாட்டில் உள்ள டில்லி செங்கோட்டையை ஒப்படைக்கக் கோரி, முகலாயர் அரச குடும்பத்தின் வாரிசு என்று கூறிக் கொள்ளும் பெண் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இழப்பீடு தொகை

முகலாயர் ஆட்சியின்போது, 17ம் நுாற்றாண்டில் டில்லியில் கட்டப்பட்டது செங்கோட்டை. வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டடத்துக்கு உரிமை கேட்டு, முகலாயர் அரச குடும்ப வாரிசு என்று கூறிக் கொள்ளும், சுல்தானா பேகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முகலாயர் அரச குடும்பத்தின் கடைசி மன்னரான இரண்டாம் பகதுார் ஷா ஜபார், தன், 82 வயதில், 1862ல் உயிரிழந்தார். அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுல்தானா பேகம், தற்போது மேற்கு வங்கத்தில் வசித்து வருகிறார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: கடந்த, 1857ல் நாட்டின் முதல் சுதந்திரப் போர் துவங்கியதும், முகலாய அரச குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது, அரச குடும்பத்துக்கு சொந்தமான டில்லி செங்கோட்டை உட்பட அனைத்து சொத்துக்களையும், ஆங்கிலேய அரசு பறித்துக் கொண்டது. தற்போது, மத்திய அரசின் சட்டவிரோத கட்டுப்பாட்டில் அந்த சொத்து உள்ளது.

அரச குடும்பத்தின் தற்போதைய வாரிசு என்ற வகையில், செங்கோட்டையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனு மிகவும் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, டிவிஷன் அமர்வு ஆகியவை நிராகரித்தன.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்வதற்கு எவ்வித தகுதியும் இல்லை என்று கூறி, அந்த மனுவை அமர்வு தள்ளுபடி செய்தது.

அப்போது, 'ஒருவேளை இந்த மனுவை நாங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொள்வோம்.

'நீங்கள் ஏன், செங்கோட்டைக்கு மட்டும் உரிமை கேட்கிறீர்கள்; பதேபுர் சிக்ரி, தாஜ்மஹால் போன்றவற்றை ஏன் விட்டுவிட்டீர்கள்?' என, மனுதாரருக்கு அமர்வு கேள்வி எழுப்பியது.

Advertisement