நகருக்குள் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகருக்குள் கனரக வாகனங்கள் லோடுடன் அதி வேகத்தில் செல்வதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டை நகரில் மதுரை மெயின் ரோடு திருச்சியூர் ரோடு விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. ரோடும் குறுகலான அமைப்பில் உள்ளது. ரோடுகளின் பல பகுதிகளில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளில் இருசக்கரம் டூவீலர்களில் செல்வோர் சிரமப்பட்டு செல்கின்றனர்.
இந்த ரோடுகளில் மணல், ஜல்லி, எம் சாண்ட், கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருகளை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. கொண்டு செல்லும் பொருட்களை மூடி பாதுகாப்பாகவும் கொண்டு செல்வது இல்லை. மண் காற்றில் பறந்து டூவீலர்கள் ஓட்டி செல்பவர்களின் கண்களை பதம் பார்க்கிறது. கனரக வாகனங்களுக்கு ஏற்ற வகையில் ரோடுகளில் தரம் இல்லை. இருப்பினும் லாரிகள் அதிவேகத்தில் வருவதால் மக்கள் பயப்படுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் தான் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசாரும் அறிவுறுத்துவதில்லை. வரிசை கட்டி வாகனங்கள் செல்வதை கண்டு கொள்வதும் இல்லை.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் இது குறித்து குறிப்பிட்ட நேரங்களில் தான் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.