சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

பெங்களூரு: சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கலி ஜனார்த்தன் ரெட்டி. தற்போது எம்.எல்.ஏ., ஆக உள்ளார். இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக ஓய்எஸ் ராஜசேகர ரெட்டி இருந்த போது, 68.5 எக்டேர் மற்றும் 39.5 எக்டேர் இரும்பு தாது சுரங்க குத்தகைகக்கு விடுவதில் ஜனார்த்தன் ரெட்டி நிறுவனத்திற்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டதாகவும், மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஐபிசி 120 பி, 420, 409, 468 மற்றும் 471 உள்ளிட்ட பிரிவுகளிலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 2007 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் விதிகளை மீறி செயல்பட்டதும், பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் தாதுக்களை வெட்டி எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.884.13 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமானது. பிறகு வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்லவே, 2025 மே மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு ஐதராபாத்தின் நம்பள்ளியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 3,400 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. 219 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்ப வழங்கிய நீதிமன்றம் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கரிபந்தம், ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும்
-
சென்னையில் நாளை 2 இடங்களில் போர் ஒத்திகை
-
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட செயலாக்கம் எப்போது: இஸ்ரோ தலைவர் தகவல்
-
மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
-
ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்