ஈரோடு ஜவுளி சந்தைகளில் சில்லறை விற்பனை அதிகம்
ஈரோடு:ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை ஜவுளி சந்தை நடந்தது. இதில் சில்லறை விற்பனை அதிகமாக இருந்தது.
ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஜவுளி விற்பனையாளர்கள், வியாபாரிகள், பெரிய நிறுவனங்களின் நேரடி முகவர்கள் கடைகள் அமைத்தும், சாலைகளில் கடை போட்டும், வாகனங்கள், குடோன்களில் வைத்தும் ஜவுளி விற்பனை செய்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: வெயில் அதிகமாக இருந்தாலும், நேற்றைய சந்தையில் கடைகளும் அதிகமாக போடப்பட்டிருந்தன. பல்வேறு நிறுவனங்கள், வியாபாரிகள் நேரடியாக ஜவுளிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். புதிய ரக ஜவுளிகள் நேற்று அதிகமாக வரத்தானது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் வருகை தந்தனர்.
நேற்று வெயிலுக்கு ஏற்ற காட்டன் ரக துணிகள் அதிகமாக விற்பனையானது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஈரோட்டை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள், ஜவுளி சந்தைக்காக வந்தனர். புடவை, வேட்டி, லுங்கி, துண்டு, பெட்ஷீட், பனியன், ஜட்டி, நைட்டி, உள்ளாடைகள் உட்பட ரெடிமேட் ஆடைகளை வாங்கி சென்றனர். கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், சுற்றுலா பயணிகள், கோடை விடுமுறைக்காக வந்து செல்வோரால், சில்லறை விற்பனை அதிகமாக நடந்தது.
இவ்வாறு கூறினர்.